கருத்து கணிப்பால் பங்கு சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம்

By செய்திப்பிரிவு

மும்பை: மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதால், சென்செக்ஸ் நேற்று 2,500 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மக்களவை தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி முடிந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில், வார விடுமுறைக்கு பிறகு நேற்று காலையில் பங்குச் சந்தைகள் சுமார் 3% உயர்வுடன் தொடங்கின. மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிஅமையும் என கருத்துக் கணிப்புகள் வெளியானதால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இதனால் பங்குச் சந்தை குறியீட்டெண்கள் புதிய உச்சத்தை தொட்டன.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 76,739 புள்ளிகளையும், நிப்டி 23,339 புள்ளிகளையும் எட்டி புதிய உச்சத்தை தொட்டன. வர்த்தக இறுதியில், சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்ந்து 76,469-லும் நிப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,264-லும் நிலைபெற்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் ரூ.412 லட்சம் கோடியில் இருந்து ரூ.426 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் மட்டுமின்றி, கடந்த2023-24 நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பையும் மீறி 8.2% ஆக உயர்ந்தது, நிதி பற்றாக்குறை குறைந்தது, பருவமழை முன்கூட்டியே தொடங்கியது, மே மாத ஜிஎஸ்டி வசூல்10% அதிகரித்தது உள்ளிட்டவையும் பங்குச் சந்தை உயர்வுக்கு காரணங்களாக அமைந்தன.

‘நிப்டி 50’ பட்டியலில் உள்ள என்டிபிசி, எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்தன. எனினும், ஹெச்சிஎல், எல்டிஐ மைண்ட்ரீ மற்றும் எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் 1 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE