விமானப் பயணங்கள் பற்றிய கனவுகள் எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதில் இருந்தன. முதல் வேலையில் பூனா (அப்போது அதுதான் பெயர்) சென்று திரும்புகையில், இயந்திரப் பழுது என்று பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார்கள். எல்லாமே பிடித்திருந்தது அப்போது. முதல் பயணமல்லவா?
பிறகு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கையில் ரயில் பயணத்தைப் போல ஒரு விமானப் பயணம் என்றுமே இனித்ததில்லை. விமானப் பயணம் என்றாலே விறைப்பான மனிதர்கள், போலி நாகரீகம், அசௌகரிய அமைதி, இறுக்கமான சூழ்நிலை என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனாலும் நேரத்தை சேமிக்கும் விமானத்தை விலக்க முடியவில்லை.
என் எண்ணத்தை எதிரொலிக்கும் புத்தகமாக ‘எய்ல் பி டாம்ட்’ எனும் புத்தகத்தைக் கண்டேன். Swaying hips, praying lips and flying tips எனும் குறும்பான tagline பிடித்துப்போனது. ஒரு பெரும் பயணக்காரர் அளிக்கும் ஆலோசனைகள் என்பதால் நிச்சயம் வித்தியாசமான புத்தகம் என்று நினைத்து வாங்கினேன். ஒரு விமானப் பயணத்தில் படித்து முடிக்கும் அளவு தான் இருந்தது.
ரிஷி பிப்பாரய்யா என்பவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனைத்துறைத் தலைவர். பணி நிமித்தம் காரணமாக நிறைய பயணித்திருக்கிறார். அவை அனைத்தையும் நகைச்சுவை சொட்டச் சொட்ட எழுதியிருக்கிறார்.
பிஸினஸ் கிளாசுக்கு அப்கிரேட் ஆவது எப்படி என்று தொடங்கி வெளிநாட்டு இமிகிரேஷன் ஆசாமியிடம் ஸ்டாம்பிங் வாங்குவது வரை அனைத்தும் நாம் தொடர்பு கொள்ளக் கூடிய அனுபவங்கள். நீங்கள் ஒரே ஒரு முறை விமானப் பயணம் மேற்கொண்டிருந்தாலே அனுபவித்துப் படிப்பீர்கள். இல்லாவிடில் இதுதானா விமானப் பயணம் என்று தோன்றும் அளவிற்கு உங்களை 38,000 அடிகள் மேலே கொண்டு செல்வது உறுதி!
செக்யூரிட்டி பகுதியை எளிதாகக் கடக்க என்ன செய்ய வேண்டும்? சுலபமாக கழட்டவல்ல கட் ஷூ, பெல்ட் என அணிய வேண்டும். வயதானவர் பின் நிற்கக்கூடாது. அணியும் உடை தவிர சகலத்தையும் தனி ட்ரேயில் போட்டு விட வேண்டும். ஜன்னல் சீட்டா அல்லது எய்ல் சீட்டா என்றால் அது உங்கள் மூத்திரக்குடத்தின் தாங்கும் சக்தியை பொறுத்தது என்கிறார். ஆனால் நடு சீட்டு ஆசாமிகள் பாவப்பட்டவர்கள். இரு புற கைப்பிடிகளும் கிடைக்காமல் அவர்கள் படும் அவதி சொல்ல முடியாதது. சகிப்புத்தன்மை கொண்ட புத்தபிட்சுக்கள் மட்டும் நடு சீட்டுகளாக தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.
மேலும் அருகில் அமரும் தேவதையுடன் பேச்சுக் கொடுப்பது எப்படி? ஒரு தொழிலதிபர் அமர்ந்தால் அதில் ஆதாயம் பெறுவது எப்படி? ஒரு பைலட் (டியூட்டி இல்லாத நேரம்) அருகில் அமர்ந்தால் என்னவெல்லாம் கேட்கலாம்? இப்படி நிறைய டிப்ஸ் தருகிறார்
பைலட்டுகள் தூங்கி விமானங்கள் தானே ஆட்டோ மோடில் ஓடும் விவரங்கள் படிக்கும் போது ரஷ்யாவிற்கு கூட ரயிலில் செல்லலாமா என்று யோசிக்க வைப்பவை.
இரு பைலட்டுகளில் ஒருவர் மாற்றி ஒருவர் கழிப்பறை செல்கையில் கதி கலங்குகிறது என்கிறார்.
பைலட்டுகள் பேசும் மொழி முடியும் வரையில் புரிவதில்லை. மைக்கை விழுங்குவது போல வாயை வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டவாறு அவர்கள் திக்கி திணறிப் பேசியது என்ன என்று, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து தான் புரிந்து கொள்ள முடிகிறது.
விமானத்தில் உணவு அளிப்பதே நம் கவனத்தை பயணம் தவிர்த்து வேறு பக்கம் திருப்பும் சூழ்ச்சியோ? ஒரு புறாவுக்குக் கூட போதாத உணவை அவர்கள் ஆடி ஆடி வந்து பரிமாறி, பின் சுத்தம் செய்வதற்குள் பயணம் முடிகிறது.
ஒரு பாக்கெட் சாப்பிட்டு விட்டு போதவில்லை என்று விமானப் பணிப்பெண்ணிடம் இன்னொன்று கேட்டால்?
நான் பணிப்பெண்ணிடம், “இன்னொரு மீல்ஸ் வேண்டும்!”
பணிப்பெண் என்னிடம், “இன்னொரு மீல்ஸ் வேண்டும்?”
மற்றொரு பணிப்பெண்ணிடம் திரும்பி, “இவருக்கு இன்னொரு மீல்ஸ் வேண்டும்!”
அந்த மற்றொரு பணிப்பெண் என்னிடம், “இன்னொரு மீல்ஸ் வேண்டும்?”
நான் அந்த பணிப்பெண்ணிடம், “இன்னொரு மீல்ஸ் வேண்டும்!”
அந்த மற்றொரு பணிப்பெண் எல்லா சக பயணிகளையும் பார்த்து, “இவருக்கு இன்னொரு மீல்ஸ் வேண்டும்!”
எல்லா சக பயணிகளும் அவரிடம், “ஆம், அவருக்கு இன்னொரு மீல்ஸ் கொடுங்கள்!”
இப்படி ரகளையாய் கலாய்க்கிறார் புத்தகம் முழுதும். வரிக்கு வரிக்கு நையாண்டியும் கிண்டலும் கொப்பளிக்கிறது. நகைச்சுவையுடன் நாசூக்காய் பல உண்மைகளையும் ஆலோசனைகளையும் மெலிதாக எடுத்துரைக்கிறார்.
Technical snag என்ற புளுகு பற்றி சொல்லும் போதும், பிஸினஸ் கிளாஸ் மனிதர்களுக்கு கிடைக்கும் விருந்தோம்பல் பற்றி சொல்லும் போதும், ஏன் விமானத் துறை மட்டும் நஷ்டத்திலேயே இயங்குகின்றன எனும் போதும் ஆசிரியர் அறிவின் ஆழம் தெரிகிறது.
நம்மவர்கள் பரவாயில்லை. அயல் நாடுகளில் பறக்கையில் நடந்த அசம்பாவிதங்களும் பிரபலங்கள் செய்யும் அலப்பறைகளையும் படிக்கும்போது ஒரு நடை குலதெய்வம் கோயிலுக்கு போய் வந்தால் என்ன என்று தோன்றும்!
1992-ல் மும்பை- நியூயார்க் இரு வழி கட்டணம் 900 டாலர்கள். இன்று குறைந்த கட்டணமாக 1100 டாலர்கள். 1992-ல் ஒரு பேரல் எண்ணெய் 18 டாலர். இன்று 110 டாலர். விமானக் கட்டண சொதப்பல் தான் விமானத்துறையை தொடர்ந்து நஷ்டத்தில் வைத்திருக்கின்றது என்கிறார். (இதைக் கண்டுபிடித்ததற்காக தனக்கு நோபல் பரிசு கிடைத்தால் அதை சுவீடன் வரும் போது பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளதாக தன்னடகத்துடன் தெரிவிக்கிறார்.)
இதை பிராயணம் பற்றிய நூல் என்பதை விட கார்பரேட் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் நூலாகக் கொள்வதே சரி. எனக்கும் தோன்றும். சென்னையிலிருந்து கோயமுத்தூர் செல்லும் விமானத்தில் இந்தியும் வங்காளமும் பேசத் தெரிந்த பணிப்பெண்கள் எதற்கு? மதுரைக்கு செல்லும் தமிழர்களுக்கு ஏன் விறைத்துப் போன மைதா கேக்கு? பொங்கலும் வடையும் சாம்பாரும் ஆகாதா? வாடிக்கையாளர் மனம் உணராத எந்த தொழிலும் லாபத்தில் செழிக்காது என்று ஏன் யாரும் இவர்களுக்கு சொல்வதில்லை?
புத்தகம் முடிக்க முடிக்க விமானம் தரை இறங்குகிறது. பயணத்தைப் போல மனதை விசாலப்படுத்தும் அனுபவம் வேறெதுவும் உண்டோ?
gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago