ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பில் சென்னையில் மின்சார வாகனங்களுக்கான அதிவேக சார்ஜிங் நிலையம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் முதல்முறையாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பாக 4 சக்கர மின்சார வாகனங்களுக்கான 180 கிலோவாட் அதிவேக சார்ஜிங் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கான முதல் 180 கிலோவாட் அதிவேக சார்ஜிங் நிலையம் சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஒரே அதிவேக பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையத்தில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் சார்ஜிங் இணைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக ஹூண்டாய் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவு நிர்வாக இயக்குநர் ஜே வான் ரியு கூறியதாவது:

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 28-ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வேளையில், சென்னையில் முதல் 180 கிலோவாட் கொண்டஅதிவேக சார்ஜிங் நிலையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மனித குலத்துக்கான முன்னேற்றம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அனைத்து மின்சார வாகன பயனர்களின் வசதியையும் மேம்படுத்துவதே எங்களது நோக்கம்.

அந்த வகையில் எங்களது சார்ஜிங் நிலையங்களை எந்த 4சக்கர மின்சார வாகன பயனாளிகளும் பயன்படுத்தலாம்.தொடர்ந்துஇதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களில் மொத்தம் 100 அதிவேக சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.

இதுமின்சார வாகனங்களின் சூற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும், மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிக வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் உதவும்.

அனைத்து மின்சார வாகன வாடிக்கையாளர்கள், ஹூண்டாயின் இந்த பொது 180 கிலோவாட் அதிவேக சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்த, ‘மை ஹூண்டாய்’ செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இந்த செயலிமூலம் டிஜிட்டல் பணம் செலுத்துதல், ரிமோட் சார்ஜிங் நிலையை கண்காணித்தல் உள்ளிட்டவற்றை செய்ய முடியும். இந்த செயலியை ஹூண்டாய் மற்றும் ஹூண்டாய் அல்லாத மின்சார வாகன பயனர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உறுதி: தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘மின் வாகனங்களுக்கான இலகுவான சூழலை ஏற்படுத்தும் வகையில், சார்ஜிங் மையங்களுக்கான வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் விரைவில் மின் வாகனங்களுக்கான அதிநவீன சார்ஜிங் மையங்கள் அமைப்பதை உறுதிசெய்வோம்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE