‘தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி 50% குறையும்’ - தாமதமான கோடை மழையால் பாதிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தாமதமாக தொடங்கிய கோடை மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உப்பு உற்பத்தி 50 சதவீதம் குறையும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழையால் உருக்குலைந்து போன உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியைத் தொடங்கும் வேளையில் பெய்த இந்த திடீர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

தாமதமாக தொடக்கம்: இந்நிலையில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களை உருக்குலைத்தது. அனைத்து உப்பளங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மழையால் உருக்குலைந்த உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 15-ம் தேதிக்கு மேல் தான் தொடங்கினர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தவே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

சில உப்பளங்களில் ஏப்ரல் மாத கடைசியில் உப்பு உற்பத்தி தொடங்கியது. அதுவும் தரமான உப்பு உற்பத்தி இன்னும் வரவில்லை. பழுப்பு நிறத்தில் தான் உப்பு வருகிறது. தூய்மையான வெள்ளை நிற உப்பு இன்னும் வரவில்லை. இந்த வாரத்தில் தான் உப்பு உற்பத்தி முழுமையாக தொடங்குவதற்கான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது பெய்த மழை அதனை மேலும் தாமதபடுத்திவிட்டது.

50 சதவீதம் குறையும்: இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: ''கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையால் இந்த ஆண்டு ஏற்கனவே உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் தாமதம். இந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கனமழையால் தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் 10 நாட்களில் உப்பு உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் உப்பு உற்பத்தி மேலும் தாமதமாகும்.

இந்த ஆண்டு 50 சதவீதம் அளவுக்கு தான் உப்பு உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்களிடம் உப்பு கையிருப்பு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் உப்பு டன்னுக்கு ரூ.4000 வரை விலை போகிறது. நல்ல விலை கிடைத்தாலும் உப்பு கையிருப்பு இல்லை என்றார் அவர்.

கோடை மழை, வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள அதே நேரத்தில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது. 'ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் கவலை. இது தான் இயற்கையின் நியதி'' என்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE