மானாவாரிக்கு கைகொடுக்காத கோடை மழை - விவசாயிகள் ஏமாற்றம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோடை மழை நடப்பாண்டில் மானாவாரி விவசாயத்துக்கு கை கொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதி மானாவாரி விவசாய நிலங்களாகவும், தென் பகுதி தாமிரபரணி ஆற்றுப்பாசன நிலங்களாகவும் உள்ளன. வடக்கு பகுதியில் பெரும்பாலும் சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பணப்பயிர்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெய்யக் கூடிய பருவ மழைக்கு விதைப்பு பணியை தொடங்கி, தை மாத பிற்பகுதியில் இருந்து ஒவ்வொரு பயிராக அறுவடை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு புரட்டாசி மாதம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில், கதிர்கள் வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், டிசம்பர் 16, 17-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழைக்கு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விளைச்சலை இழந்தன. இதனால், நிலங்களில் கிடை போட, விதைப்பு செய்ய, களை பறிக்க, மருந்து தெளிக்க என பல்வேறு பராமரிப்பு செலவுகளுக்கு ஒவ்வொரு பயிர்களை பொறுத்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்திருந்த விவசாயிகள் மொத்தமாக நஷ்டமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த சித்திரை மாத பிறப்பான ஏப்.14-ம் தேதி மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பொன் ஏர் பூட்டினர். ஆனால், நிலத்தில் ஈரத்தன்மை இல்லாததால் தொடர்ந்து அவர்களால் உழவு மேற்கொள்ள முடியவில்லை. பொன் ஏர் பூட்டி 30 நாட்களை எட்ட உள்ள நிலையில், கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: கடந்த 2007-ம் ஆண்டு முதல் கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் நடைபெறுகிறது. இதனால், கண்மாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் வரலாறு காணாது மழை பெய்த போதும், நீர்நிலைகளில் தண்ணீரை தேக்க முடியாமல், வெளியேறி கடலுக்கு சென்றது. இதனால், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை மேய்ச்சலுக்கு பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பஞ்சாங்க வழக்கப்படி ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20-ம் தேதி முதல் அந்த ஆண்டுக்குரிய பாக்கி மழை முழுமையாக பெய்து கழிக்கும் என கூறுவார்கள். ஆனால், பங்குனி மாதம் முதல் மழையே பெய்யவில்லை. நீர்நிலைகளில் ஓரளவு தேங்கியிருந்த தண்ணீரும் கடுமையான வெயிலால் வேகமாக வற்றியது. கால்நடை வளர்ப்போர், அவற்றுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

சித்திரை மாதம் பிறப்பு அன்று விவசாயிகளால் பொன் ஏர் பூட்டப்பட்டது. ஆனால், நிலங்களில் போதிய ஈரத் தன்மை இல்லாததால் உழவு மேற்கொள்ள முடியவில்லை. கோடை மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், கோடை மழை போக்கு காட்டி வருகிறது. போதிய மழை பெய்தால், நிலங்களில் கோடை உழவு செய்ய வசதியாக இருக்கும். கால்நடைகளுக்கு குடிநீரும், போதிய தீவனமும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE