பிஎஸ்என்எல் 4ஜி சேவை: அரசுக்கு ஊழியர் சங்கம் சொன்ன பலே ஐடியா!

By செய்திப்பிரிவு

மும்பை: அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், பயனர்களின் எண்ணிக்கையில் சரிவை கண்டு வரும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் அரசுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்காத நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 23.54 லட்சம் பயனர்களை பிஎஸ்என்எல் இழந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஜியோ 21 லட்சம் மற்றும் ஏர்டெல் 17 லட்சம் பயனர்களை பெற்றுள்ளது.

மேலும், 2023-24 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.8 கோடி பயனர்களை இழந்துள்ளது பிஎஸ்என்எல். இந்த சூழலில் பயனர்களின் சரிவுக்கு காரணம் அதிவேக டேட்டா சேவை இல்லாததுதான் என அரசுக்கு ஊழியர்கள் சங்கம் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை திட்டங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் அது அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனம் இணைந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பை பெற்றது. ஆனால், அதற்கு அந்த கூட்டமைப்பு எடுத்துக் கொள்ளும் நேரம் நீள்கிறது. அதே நேரத்தில் 5ஜி சேவை அறிமுகத்துக்கு பிறகு தனியார் டெலிகாம் நிறுவனங்களில் பயனர் எண்ணிக்கை கூடி வருகிறது என தனது கடிதத்தில் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கலை சரி செய்யும் வகையில் வோடபோன் ஐடியாவின் நெட்வொர்க்கை தற்காலிகமாக பயன்படுத்தலாம். அதன் மூலம் பயனர்கள் வெளியேறுவதை தடுக்கலாம் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வோடபோன் ஐடியாவின் ஏஜிஆர் நிலுவைத் தொகையான ரூ.16,000 கோடிக்கு மேலான தொகையை பங்குகளாக மாற்றியது மத்திய அரசு. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சுமார் 33 சதவீத பங்குகளை அரசு தன் வசம் கொண்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கின்ற காரணத்தால் இதை செய்யலாம் என ஊழியர் சங்க உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE