தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த நிதிஆண்டில் (2023-24) அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ.1,215.79 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இரண்டாவது இடத்தை எழும்பூர் ரயில் நிலையம் (ரூ.564.17) பிடித்துள்ளது.

இந்திய ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டும் மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே இருக்கிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் வழியாக ஓடும் ரயில்கள், நிலையத்துக்கு வந்து செல்லும்பயணிகள் மூலமாக ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது.

அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மூலமாக ஆண்டுதோறும் கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது.

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண் டில் (2023-24) அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல்ரயில் நிலையம் ரூ.1,215.79 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தை எழும்பூர் ரயில் நிலையம் (ரூ.564.17 கோடி), மூன்றாவது இடத்தை கோயம்புத்தூர் ரயில் நிலையம் (ரூ.324.99 கோடி) பெற்றுள்ளன.

நான்காவது இடத்தை திருவனந்தபுரம் (ரூ.262.66 கோடி), 5-வதுஇடத்தை தாம்பரம் (ரூ.233.66 கோடி), 6-வது இடத்தை எர்ணாகுளம் (ரூ.227.59 கோடி), 7-வது இடத்தை மதுரை (ரூ.208 கோடி), 8-வது இடத்தை கோழிக்கோடு (ரூ.178.94 கோடி), 9-வது இடத்தை திருச்சூர் (ரூ.155.69 கோடி), 10-வதுஇடத்தை திருச்சி(ரூ.155.17 கோடி) ஆகிய ரயில் நிலையங்கள் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 100 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை உட்பட பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. பயணிகள் மற்றும் பயணிகள் அல்லாத வருவாய் ஈட்டப்பட்டாலும், ரயில் நிலையங்களில் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுதான் முக்கிய நோக்கம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ரயில்வேக்கு கடந்த நிதியாண்டில் (2023-24) ரூ.12,020 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், பயணிகள் ரயில் கட்டணம் மூலமாக ரூ.7,151 கோடியும், சரக்கு ரயில் கட்டணம் மூலமாக ரூ.3,674 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE