பின்னலாடை துறையில் உள்நாட்டிலேயே இயந்திரங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்க முடிவு @ திருப்பூர்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பின்னலாடை உற்பத்தி துறைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான புதியமுயற்சியில், திருப்பூர் பின்னலாடை துறையினர் களமிறங்கியுள்ளனர். இதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை துறை சார்ந்த தொழில் அமைப்புகள், கோவை கொடிசியா மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, இதற்கானமுன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் இயந்திரங்கள் உற்பத்தி துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது: பின்னலாடை உற்பத்தியில் நிட்டிங், டையிங், பதப்படுத்துதல், ஃபினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல், போஸ்ட் புரொடக்‌ஷன் உட்பட பல்வேறு நிலை செயல்பாடுகளுக்கு, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களையும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஏ.சக்திவேல் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து மேற்கொள்ள உள்ளோம்.

திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவில் உள்நாட்டு வர்த்தகம்,10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உட்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும்கூட, அதற்கான இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. பாதுகாப்புத் துறைமற்றும் சந்திரயான் 3 செயற்கை கோள் ஆகியவற்றின் பங்களிப்புக்கு, இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்புக்காக அரசு தேர்வு செய்த நகரம் கோவை.

பின்னலாடை துறை செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் இயந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, இயந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக இயந்திரங்களின் உதிரி பாகங்களை தயார் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதுமே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி, ‘‘நமக்கு நாமே திட்டத்தை கையில் எடுத்தால் மட்டுமே, நம் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். இயந்திரங்கள், உதிரி பாகங்கள் உற்பத்திக்கான முன்முயற்சி துணைக் குழுவின் வாயிலாக, நமது சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, “1960-ம் ஆண்டுகளில் ஆரம்பித்த நமது தொழில்துறை, உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், அதற்கான இயந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும், அதற்கான செயல்பாடுகளுக்கும் வெளிநாட்டையே எதிர் நோக்கி இருக்கும் நிலை மாற வேண்டும். தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன்’’என்றார்.

கொடிசியா முன்னாள் தலைவர் ஏ.வி.வரதராஜன் பேசும்போது, “இந்த முயற்சியை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு, நம்மிடம் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதற்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கொடிசியா பக்கபலமாக இருக்கும்” என்றார்.

இயந்திரங்கள் - உதிரி பாகங்கள் உற்பத்திக்கான முன் முயற்சி துணைக் குழுவின் தலைவரும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்