2023-24-ம் நிதியாண்டில் மெர்க்கன்டைல் வங்கி ரூ.1,072 கோடி நிகர லாபம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1,072கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 31.03.2024 அன்று நிறைவடைந்த நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டில் தனது மொத்த வணிகத்தில் 4.85சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.89,485 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை 3.66 சதவீதம் அதிகரித்து ரூ.49,515 கோடியாகவும், கடன் தொகை 6.35 சதவீதம் அதிகரித்து ரூ.39,970கோடியாகவும் அதிகரித்துள்ளது.

வங்கியின் நிகர மதிப்பு ரூ.6,928 கோடியில் இருந்து ரூ.7,921 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து, ரூ.1,072 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச நிதியாண்டு நிகர லாபம் ஆகும்.

வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,710 கோடியில் இருந்து ரூ.5,493கோடியாகவும் வட்டி வருமானம் ரூ.4,081 கோடியில் இருந்து ரூ.4,848கோடியாகவும் அதிகரித்துள்ளது. மொத்த வராக்கடன் 1.44 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.85 சதவீதமாகவும் உள்ளது.

இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 22 புதிய கிளைகளை திறந்துள்ளோம். 2023-2024-ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கு 100 சதவீத ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது என்றனர்.

வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் பொதுமேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE