க
லங்கிய நெஞ்சங்களுக்கு ஜாக் மா பேச்சு ஒத்தடம் தந்தது.
“எனக்காக உழைக்கும் உங்களை நட்டாற்றில் விட்டுப் போகமாட்டேன். உங்கள் முன்னால் மூன்று மாற்றுவழிகள் இருக்கின்றன. முதல் வழி, நீங்கள் சீன யாஹூவில் சேரலாம். நீங்கள் எல்லோரும் மகா திறமைசாலிகள். நானே சிபாரிசு செய்து வேலை வாங்கித் தருகிறேன். இப்போது கிடைப்பதைவிட மிகவும் அதிகமான சம்பளம் கிடைக்கும். இரண்டாம் வழி, ஸினா, ஷூ, நெட் ஈஸ் போன்ற சீன ஆன்லைன் கம்பெனிகளில் சேரலாம். இங்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். மூன்றாம் வழி, நான் தொடங்கப்போகும் புது பிசினஸில் கூட்டாளிகளாகச் சேருங்கள். யாஹூ, ஸினா, ஷூ, நெட் ஈஸ் போல் சம்பளமும், வசதிகளும் கிடையாது. அலுவகம் பீஜிங்கில் அல்ல. ஹாங்ஸெள நகரத்தில். மற்ற கம்பெனிகள் 2,000 யான்கள் ஊதியம் தருவார்கள். நம் கம்பெனியில் 800 யான்களே. அங்கே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை. நமக்கு ஏழு நாள் இருபத்துநான்கு மணி நேரம் வேலை நேரம். ஆகவே, எல்லோரும் அலுவலகத்திலிருந்து ஐந்தே நிமிடப் பொடிநடையில் வரும் தூரத்தில் தங்கவேண்டும். ஆபீஸ் வேலையாக எங்கே போனாலும் டாக்சி கிடையாது. சைக்கிள்தான்.”
“ஜாக் மா, நாங்கள் எப்போது எங்கள் முடிவைச் சொல்லவேண்டும்?”
“மூன்று நாட்களில்.”
அறையில் நிசப்தம். ஒவ்வொருவராக எட்டுப் பேரும் அறையைவிட்டு வெளியே போனார்கள். அறையில் ஜாக் மா மட்டும்.
பத்தே நிமிடங்கள். அறைக் கதவு திறக்கும் சப்தம். ஜாக் மா நிமிர்ந்து பார்த்தார். எட்டுப்பேரும் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். ஒருமித்த குரல்,``நாங்கள் உங்களோடு வருகிறோம்.”
அடுத்த நாள். ஜாக் மாவும் எட்டுப் பேரும் வேலையை விட்டார்கள். ஹாங்ஸெள வந்தார்கள். வருங்காலத்தைத் தன்னிடம் ஒப்படைக்கும் அளவு தன்னிடம் இத்தனை நம்பிக்கையா? ஜாக் மா நெஞ்சம் கனத்தது, கண்கள் பனித்தன. தனக்குள் பேசிக்கொண்டார். இது வெறும் பேச்சல்ல, சபதம். ``என் நண்பர்கள் என்னைக் கைவிடவில்லை. நானும் ஒருபோதும் அவர்களைக் கைவிட மாட்டேன். ஹாங்ஸெள போவோம். ஜீரோவிலிருந்து தொடங்குவோம்.” தோல்விகள் நமக்கில்லை தோழா என்னும் தன்னம்பிக்கை முழக்கம்!
சிறியதோ, பெரியதோ, எந்த பிசினஸும் நீண்டநாள் நிலைத்து நிற்கவேண்டுமானால், தொடங்கும்போதே தொழில் முனைவோர்கள் மூன்று விஷயங்களில் சந்தேகமேயில்லாத தெளிவோடு இருக்கவேண்டும் என்று மேனேஜ்மென்ட் மேதைகள் சொல்கிறார்கள். உலகம் முழுக்க இருக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் வரலாறுகளை அலசி, ஆராய்ந்து அவர்கள் கண்டுபிடித்திருக்கும் பேருண்மை இது. இந்த மூன்று விஷயங்கள்–
Mission (குறிக்கோள்) - எதற்காக இந்த பிசினஸ் தொடங்குகிறோம்?
Vision (தொலைநோக்கு) – வருங்காலத்தில் கம்பெனி என்னென்ன சாதிக்கவேண்டும்?
Values (கோட்பாடுகள்) – குறிக்கோளையும், தொலைநோக்கு இலக்குகளையும் எட்டுவதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய கோட்பாடுகள் எவை?
எந்த பிசினஸும் ஜெயிக்க வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் மனங்களில் தனித்துவமான பிம்பத்தை உருவாக்கவேண்டும். அன்று ஆன்லைன் வர்த்தகம் செய்தவர்கள் பெரும்பாலானோர் அமெரிக்கக் கம்பெனிகள். இவர்களின் உத்திகளை ஜாக் மா ஆராய்ந்தார். பெரிய, பெரிய கம்பெனிகளின் தயாரிப்புகளை மட்டுமே இவர்கள் விற்பனை செய்தார்கள். சீனாவில் ஆன்லைன் பிசினஸ் தொடங்க நினைத்தவர்களும் அமெரிக்க பாணியிலேயே சிந்தித்தார்கள். சீனாவுக்கு இது ஒத்துவராது என்று ஜாக் மா முடிவு கட்டினார். சீனாவில் சிறிய, நடுத்தர கம்பெனிகள்தாம் அதிகம். தாமாக உலகளாவிய மார்க்கெட்டிங் செய்யும் சிந்தனை. பணபலம், கட்டமைப்பு ஆகிய எதுவுமே இவர்களுக்கு இல்லை. இந்தத் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு வர்த்தக மேடை அமைத்துக்கொடுப்போரும் யாருமில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப முடிவெடுத்தார். அவர் மேனேஜ்மென்ட் படித்துப் பட்டம் பெற்றவரல்ல. ஆனால், Mission, Vision , Values பாணியில் சிந்தித்தார். இந்த அடிப்படையில் அவர் தன் பிசினஸுக்கு உருவாக்கிய வரைபடம்:
1. குறைந்த பட்சம் 80 ஆண்டுகள் நீடிக்கும் ஆன்லைன் பிசினஸ்.
2. சிறிய, நடுத்தர பிசினஸ்களுக்கு மார்க்கெட்டிங் உதவி.
3. பத்தே வருடங்களில் உலகின் மிகப் பெரிய ஆன்லைன் கம்பெனியாகவேண்டும்; உலகின் டாப் 10 இணையதளங்களில் இடம் பிடிக்கவேண்டும்.*
(*இன்று அலிபாபா தன் Mission, Vision, Values – களைத் தங்கள் இணையயதளத்திலேயே பெருமையோடு அறிவிக்கிறார்கள். இதன்படி, அலிபாபாவின்,
Mission – To make it easy to do business anywhere. உலகின் எந்தப் பாகத்தில் இருப்பவர்களுக்கும், வாங்குவதையும், விற்பதையும் சுலபமாக்குதல்.
Vision - We aim to build the future infrastructure of commerce. We envision that our customers will meet, work and live at Alibaba, and that we will be a company that lasts at least 102 years. வியாபாரத்தின் வருங்காலக் கட்டமைப்பை உருவாக்குவாக்குவது எங்கள் குறிக்கோள். எங்கள் வாடிக்கையாளர்கள் அலிபாபா இணையதளத்தில் சந்திக்கவேண்டும், பணி புரியவேண்டும், சேர்ந்து வாழவேண்டும். எங்கள் கம்பெனி 102 ஆண்டுகள் நீடித்து நிலைக்கவேண்டும்.
Values – Customer first, Teamwork, Embrace change, Passion, Integrity, Commitment வாடிக்கையாளர்களுக்கு முதலிடம், ஒத்துழைப்பு, மாற்றங்களை விருப்பத்தோடு ஏற்றல், பேரார்வம், நேர்மை, அர்ப்பணிப்பு.
ஜாக் மா, தான் எடுக்கும் முடிவுகளில் உறுதி கொண்டவர். அதே சமயம், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்னும் பிடிவாதக்காரரல்ல. தன் திட்டத்தை நெருங்கிய நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு பட்டைதீட்ட விரும்பினார்.
ஜாக் மா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்திப்பு. மனைவி காத்தி, மற்றும் 16 பேர். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் என்று ஜாக் மாவுக்கு அபாரத் தன்னம்பிக்கை. நிகழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்ய ஒரு நண்பரை ஏற்பாடு செய்தார்.
ஜாக் மா தன் திட்டத்தை விளக்கினார். 17 பேரிடம் உரையாடுவதுபோல் இல்லாமல், பல லட்சம் பேரிடம் முழங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, லட்சிய வேகம். ஒவ்வொரு வார்த்தையும் உத்வேக மாத்திரை.
“நாம் இன்று ஒரு மகத்தான பயணம் தொடங்குகிறோம். நம் B2B* பிசினஸ் புரட்சிகரமான திட்டம். இது புதிய பாதை. ஆகவே, இருட்டில் நாம் தடுமாறலாம்.
ஆனால், நாம் அனைவரும் கை கோர்த்து முன்னேறும்போது எதற்கு பயப்படவேண்டும்?”
(*ஆன்லைன் பிசினஸ், இ- காமர்ஸ் என்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியாபாரத்தில் மூன்று வகைகள் உண்டு - B2B. Business to Business அதாவது, ஒரு கம்பெனி தன் தயாரிப்புப் பொருட்களை இன்னொரு கம்பெனிக்கு விற்பது; B2C. Business to Customer. கம்பெனி கஸ்டமருக்கு விற்பது; C2C. Customer to Customer. கஸ்டமர்களுக்குள் நடக்கும் வியாபாரம்.)
“நாம் தொடங்கப்போவது இன்று சின்ன கம்பெனி. ஆனால், ஐந்தே வருடங்களில் நம் கஸ்டமர்கள் எங்கே இருப்பார்கள் தெரியுமா?”
சில விநாடிகள் மெளனம். கேட்போர் மனதில் ஆவல், ஆவல்.
தொடர்ந்தார், “நம் கஸ்டமர்கள் சீனாவில் அல்ல, அமெரிக்காவில் இருப்பார்கள். நம் பிசினஸ் சீன பிசினஸ் அல்ல, அகில உலக பிசினஸ்.”
ஒரு நண்பர் கேட்டார், ``நம் போட்டியாளர்கள் அமெரிக்க ஆன்லைன் கம்பெனிகள் பிரம்மாண்டமானவை. அவர்களிடம் பணபலம் இருக்கிறது, தொழில்நுட்பம் இருக்கிறது. ஹார்ட்வேர் எனப்படும் கம்ப்யூட்டர்கள் ஆயிரம் ஆயிரம். நாம் அவர்களோடு எப்படி மோத முடியும்?”
“அமெரிக்கக் கம்பெனிகளிடம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இருக்கிறது. (தலையைச் சுட்டிக்காட்டி) நம்மிடம் சாஃப்ட்வேர் இருக்கிறது. மூளை பலத்தில் நாம் ஒவ்வொருவரும் பத்து அமெரிக்கர்களுக்குச் சமம். அப்புறம், நாம் அமெரிக்கக் கம்பெனிகளோடு நேருக்கு நேர் மோதப்போவதில்லை.”
ஜாக் மா நண்பர்கள் முகங்களைப் பார்த்தார். அங்கே கேள்விக்குறிகள். அவருக்குப் புரிந்தது. பிஸினஸில் ஜெயிக்க வேண்டுமானால் போட்டிக் கம்பெனிகளைப் பின் தள்ளிவிட்டு முன்னேறவேண்டும் என்பதுதான் சாதாரண மனிதப் புரிதல். ஆரம்ப காலத்தில் ஆரோக்கியமாக இருந்த இந்தப் போட்டிகள் இன்று யுத்தங்களாகி விட்டன. நாம் ஜெயித்தால் மட்டும் போதாது, எதிரிகளை அழிக்க வேண்டும், ஒழிக்கவேண்டும் என்னும் மனப்போக்கு.
இத்தகைய மனோபாவத்தோடு இருப்பவர்களுக்குத் தன் அணுகுமுறை, யுக்தி எத்தனை வித்தியாசமானது என்று எப்படிப் புரியவைப்பது?
குட்டிக் கதைகள் சொல்லித் தன் கருத்துக்களை ``நச்” என்று பதியவைப்பதில் ஜாக் மா கெட்டிக்காரர். ஒரு சினிமாக் கதையை முகபாவங்கள், உடல் மொழிகளுடன் நடித்தே காட்டினார். அந்தக் கதை......
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago