தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டால் வேலைவாய்ப்பை இழந்த தொழில்முறை ஓவியர்கள்!

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பின்றி, வருவாய் இழந்து வருவதாக தொழில் முறை ஓவியர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இத்தொழிலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசியல் கட்சித் தலைவர் பிறந்த நாள், அரசு சார்ந்த நிகழ்வுகள், இயற்கை ஓவியங்கள் உள்ளிட்ட பணிகளில் தொழில் முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சி சின்னங்கள் வரையத் தொழில் முறை ஓவியர்களைத் தேர்தல் அறிவிப்பு முன்னரே அரசியல் கட்சியினர் முன்பணம் கொடுத்துத் தேர்தல் பணியில் பிரதானப்படுத்தி வந்தனர். இதே போல, திரைப்படத்துறையிலும் தொழில்முறை ஓவியர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு இருந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கட் - அவுட்களை மிகப் பிரமாண்டமாகத் தயார் செய்து மக்களின் கவனத்தை தொழில்முறை ஓவியர்கள் ஈர்த்து வந்தனர். இந்நிலையில், டிஜிட்டல் தொழில் நுட்பம் வந்த பின்னர் அரசியல் மற்றும் திரைப்படத்தொழிலில் தொழில் முறை ஓவியர்களுக்கு படிப்படியாக வேலை வாய்ப்பு குறைந்தது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மிகக் குறைந்த விலையில் நேர்த்தியான வடிவங்களில் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் கிடைக்கத் தொடங்கியதால், தொழில்முறை ஓவியர்கள் வேலை வாய்ப்பின்றி பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

குறிப்பாகக் கட்டிடங்களுக்கு பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் நேரங்களில் மட்டும் கிராம பகுதியில் சுவர் விளம்பர எழுதும் வேலைவாய்ப்பு தொழில்முறை ஓவியர்களுக்கு கிடைத்து வந்தது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு காரணமாகத் தேர்தல் காலத்திலும் முற்றிலும் வேலைவாய்ப்பு இழந்திருப்பதாகத் தொழில்முறை ஓவியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த ஓவியர் காமராஜ் மற்றும் சிலர் கூறியதாவது: கடந்த காலங்களில் நேரம் இல்லாமல் ஓவியத் தொழிலில் பரபரப் போடு இயங்கி வந்தோம். இத்தொழிலை நம்பி கடன் வாங்கி வீடு கட்டினோம். சுவரில் பல நாட்கள் உழைத்து ஓவியங்களை உயிரோட்டமாக வரைவோம். டிஜிட்டல் தொழில்நுடபம் வந்த பின்னர் எங்கள் தொழில் நலிவடைந்தது. தேர்தல் நேரத்தில் எங்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

தேர்தல் ஆணையம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் தேர்தல் விழிப்புணர்வுக்கு ஃபிளக்ஸ் பேனர்கள் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். இதுபோன்ற வேலைகளில் அரசு சுவர்களில் எழுதி விழிப்புணர்வு செய்தால் எங்களைப் போன்ற தொழில்முறை ஓவியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், அரசு மற்றும் அரசுப் பள்ளி சுவர்களில் தனியார் அமைப்புகள் உதவியுடன் இயற்கை ஓவியங்கள், தலைவர்கள் ஓவியங்கள் வரைய அரசு நடவடிக்கை எடுத்தால், நலிந்து வரும் இத்தொழிலைக் காக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE