நடப்பு நிதி ஆண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாபம் ஈட்டும்

By வாசு கார்த்தி

ட்டுமொத்த வங்கித்துறையும் சிக்கலில் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை வாராக்கடன் முக்கிய பிரச்சினை. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.சுப்ரமணியகுமாரை சில நாட்களுக்கு முன்பு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் வங்கியின் தலைமை பொறுப்புக்கு வந்து ஓர் ஆண்டு முடிவடையப் போகிறது. இந்த காலத்தில் அவர் செய்துள்ள மாற்றம், வங்கியின் தற்போதைய நிலைமை, வாராக்கடன் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து…

வங்கியின் நிலைமை இன்னும் மேம்பாடு அடையவில்லையே? பல சிக்கல் இருந்துகொண்டுதானே இருக்கிறது?

நீங்கள் வாராக்கடனை வைத்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். வங்கியை அளவிடுவதற்கு பல குறியீடுகள் உள்ளன. இதில் ஒரு குறியீடுதான் வாராக்கடன். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வங்கி ஒவ்வொரு குறியீடுகளிலும் மேம்பட்டு வருகிறது. வங்கியில் நிகர லாபம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் செயல்பாட்டு அளவிலான லாபம் கடந்த ஓர் ஆண்டில் 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அடுத்து வங்கியின் சேவை உயர்ந்திருக்கிறது. இதில் என்ன மாறுதல் இருக்க முடியும் என யோசிக்கலாம். இதை சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இதுவரை வங்கி சொந்தமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தது. ஆனால் 2015-16-ம் ஆண்டில் வேறொரு நிறுவனத்தின் தொழில்நுட்பத்துக்கு மாறியது. இதனால் ஊழியர்களிடம் பெரிய குழப்பம் இருந்தது. சேவை பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டதால் ஊழியர்களிடையே நம்பிக்கை உயர்ந்துள்ளது.

அதேபோல 2011-ம் ஆண்டு பணியாளர்களை சேர்ப்பதற்கான நடைமுறையில் முறைகேடு நடந்தது. இதனால் 10 நபர்கள் முறைகேடு செய்திருந்தாலும் 100 நபர்களிடம் விசாரணை நடந்தது. இதன் காரணமாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டது. தவிர கடன் வழங்கிய கணக்குகளை சரியாக கண்காணிக்காமல் இருந்ததால் வாராக்கடன் உருவானது. தற்போது ஊழியர்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதால் சேவையும் அதிகரித்திருக்கிறது. கடனை கண்காணிப்பது மற்றும் வாராக்கடனை வசூலிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வாராக்கடன் அதிகரித்திருப்பதால் கடன் வழங்குவது குறைந்திருக்கிறதா?

வங்கியின் முக்கிய பணியே கடன் வழங்குவதுதான். இதனை எப்படி குறைக்க முடியும். முன்பை விட கடன் வழங்குவது அதிகரித்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு எங்களுடைய ஒட்டுமொத்த கிளைகளில் 30 சதவீத கிளைதான் தினசரி கடன் வழங்கிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது 60 சதவீத கிளைகள் தினசரி கடன் வழங்கிகொண்டிருக்கின்றன. ஒரு வாரத்தில் என எடுத்துக்கொண்டால் எங்களுடைய 80 சதவீத கிளைகள் குறைந்தபட்சம் ஒரு கடன் வழங்குகின்றன. நாங்கள் வழங்கும் கடனில் 58 சதவீதம் கார்ப்பரேட் கடனாக இருந்தது. தற்போது இந்த விகிதம் 38 சதவீதமாக குறைந்திருக்கிறது. சிறு கடன்கள், எம்.எஸ்.எம்.இ., விவசாயம் உள்ளிட்ட துறைகளில் கடன் வழங்குவது உயர்ந்திருக்கிறது.

வாராக்கடன் நிலைமை எப்படி இருக்கிறது. வருங்காலத்தில் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

வாராக்கடன் இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. எங்களுக்கு இருக்கும் வாராக்கடனில் 52 சதவீதம் கார்ப்பரேட் கடன்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏன் இவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்னும் கேள்வி தற்போது தேவையில்லாதது என நினைக்கிறேன். இந்த கடன்களை வசூலிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

கடனை மறுசீரமைப்பு செய்வது என்பது வங்கி அளவில் முடியாது என ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவினை வெளியிட்டது. அதனால் இந்த உத்தரவு எங்களை மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளையும் பாதிக்கும். ஆடிட் முடியவில்லை என்பதால் வாராக்கடன் குறித்து கருத்து கூற முடியாது. ஆனால் ஆர்பிஐ உத்தரவு நிச்சயம் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வங்கி எப்போது லாபப் பாதைக்கு திரும்பும்?

லாபம் குறித்து பேசுவதற்கு முன்பு சில விஷயங்களை விளக்கினால் உங்களுக்கு எளிதில் புரியும்.

வாராக்கடன் என்பது இரட்டை பிரச்சினை. ஒரு கடன் கணக்கு வாராக்கடன் ஆகிறது என்றால் அந்த கணக்கில் இருந்து எந்தவிதமான வருமானமும் வராது. தவிர ஏற்கெனவே இருக்கும் செயல்பாட்டு லாபத்தில் இருந்து இந்த கடனுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே வாராக்கடன் இருந்து வருவதால் ஒதுக்கீடு செய்வதும் நடந்து வருகிறது. தற்போது ஒட்டுமொத்த வாராக்கடனுக்கும் 58 சதவீதம் அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடன்களை விற்கும் பணிகள் நடந்து வருகின்றன. எங்களுடைய பல பெரிய வாராக்கடன் கணக்குகள் என்.சி.எல்.டி. வசம் இருக்கின்றன. உதாரணத்துக்கு 100 ரூபாய் கடனுக்கு 50 ரூபாய் என்சிஎல்டி வசூலித்து கொடுக்கும் என்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஏனெனில் ஏற்கெனவே வாராக்கடனுக்காக 58 ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். 50 ரூபாய் வரும்பட்சத்தில் 100 ரூபாய் கடனுக்கு ரூ.108 மொத்தமாகக் கிடைக்கும். கடனுக்கு 100 ரூபாய் சென்றால் கூட 8 ரூபாய் லாபத்தில் சேரும். 25 சதவீத வாராக்கடனுக்கு 100 சதவீதம் (ரூ.10,000 கோடி) ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

தவிர இந்த ஆண்டு குறைந்தபட்சம் 20 சதவீத வாராக்கடன் கணக்குகளை வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதனால் நடப்பு நிதி ஆண்டுக்குள் காலாண்டு அடிப்படையில் நிகர லாபத்தை எட்டுவோம். நடப்பு நிதி ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.

நீங்கள் இவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைக்கப்பட போகும் வங்கி என வல்லுநர்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறதே?

எந்த பொதுத்துறை வங்கியும் இணைக்கப்படமாட்டது என நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். தவிர இணைக்கப்போவதாக இருந்தால் ரூ.4,694 கோடிக்கு மத்திய அரசு முதலீடு செய்திருக்காது. எந்த வங்கியால் சொந்தமாக செயல்படமுடியாதோ அந்த வங்கிதான் இணைக்கப்படும். அந்த நிலைமையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இல்லை.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து?

என்.சி.எல்.டி திவாலுக்கு விண்ணப்பித்திருக்கும் கம்பெனிகளில் ஏதேனும் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? தனியார் துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகிறது என்னும்பட்சத்தில் எப்படி இத்தனை நிறுவனங்கள் திவாலுக்கு விண்ணப்பித்திருக்க முடியும். அதனால் தனியார் மயமாக்கினால் சிறப்பாக செயல்படும் என்று சொல்ல முடியாது. பொதுத்துறை வங்கிகள் இல்லை என்னும் பட்சத்தில் வங்கிச்சேவை பலருக்கும் கிடைக்காது.

ஐஓபி முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கடந்த சில ஆண்டுகளாக உங்கள் பங்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை.?

செபி விதிமுறைகளின்படி பங்குகளின் லாபம் குறித்து அதிகம் பேச முடியாது. ஆனால் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கான பலன் வரும் ஐந்தாண்டுகளில் தெரியவரும்.

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்