மும்பை: 2024-ஆம் ஆண்டின் 200 இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம்போல் முகேஷ் அம்பானி முதலிடமும், கவுதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.
ஆனால், எதிர்பாராத ஓர் நிகழ்வாக பைஜு ரவீந்திரன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தியாவின் பிரபல இணையவழி கற்பித்தல் நிறுவனம், கல்வி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என்ற பெருமைக்குரியது பைஜு’ஸ். கரோனா ஊரடங்கு காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தது. ஆனால், அந்த வேகம் நீடிக்கவில்லை. அமலாக்கத் துறை சோதனை, முதலீட்டாளர்கள் உடனான பிரச்சினை, ஊழியர்கள் வேலை இழப்பு என தொடர் சர்ச்சைகளில் பைஜு’ஸ் சிக்கிவந்ததன் விளைவாக தற்போது ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பைஜு ரவீந்திரன்.
ரூ.17,545 கோடி சொத்து மதிப்புடன் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலில் இடம்பெற்ற பைஜு ரவீந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என ஃபோர்ப்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது.
வீழ்ச்சிக்கு காரணம் என்ன?: பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் ஆகிய இருவரும் சேர்ந்து 'திங்க் அன்ட் லேர்ன்' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை 2011-ல் தொடங்கினர். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் வீடியோ மூலம் டியூஷன் நடத்த தொடங்கியது.
» புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதானி குழுமம் சாதனை
» உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் 200 பேரில் அம்பானி முதலிடம்
கடந்த 2015-ம் ஆண்டில் ‘பைஜு’ஸ்’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் மட்டுமின்றி மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல் படிப்புக்கான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நீட், ஜேஇஇ, கேட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை இணையவழியில் நடத்த தொடங்கியது.
கல்வித் துறையில் புதுமையை புகுத்திய இந்நிறுவனத்தை இணையவழி கற்பித்தலின் முன்னோடி என்றே சொல்லாம். மாணவர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது. 2018 வாக்கில் இந்த செயலியை 1.5 கோடி பேர் பயன்படுத்தினர்.
இதில் பணம் செலுத்தி பயன்படுத்தியவர்கள் மட்டும் 9 லட்சம். பெருநகரங்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் பைஜு’ஸ் பிரபலமடைந்தது. கடந்த 2018-ல் இந்தியாவின் முதல் கல்வி தொழில்நுட்ப (எட்டெக்) யூனிகார்ன் (ரூ.8,300 கோடி) என்ற அந்தஸ்தைப் பெற்றது.
2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவியது. கரோனா பரவலைத் தடுக்க 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணையவழி வகுப்புக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், இணையவழி கற்றலில் நிபுணத்துவம் பெற்றிருந்த பைஜு’ஸ் நிறுவனத்தின் செல்வாக்கு அசுர வேகத்தில் வளர்ந்தது. இதன் மூலம் கடந்த 2022-ல் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.
கரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பியது. பள்ளிகள் வழக்கம போல் செயல்படத் தொடங்கின. இணையவழி கற்றலுக்கான தேவை குறைந்ததால் பைஜு’ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நெதர்லாந்தின் புரோசஸ் என்வி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பைஜு நிறுவனத்தின் சொத்து மதிப்பை 75% சதவீதத்துக்கும் மேல் குறைத்தது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் நிதி நிர்வாகமும் சந்தைப்படுத்தல் உத்தியும் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நிறுவனத்தின் மீதான மதிப்பு மளமளவென சரிந்தது.
நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, பைஜு’ஸ் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை நிறுவனமான டெலாய்ட்டி விலகிக் கொண்டது. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2022-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,298 கோடியாக இருந்தது. அதேநேரம், ரூ.8,245 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே, இந்நிறுவனத்தில் 25%-க்கு மேல் பங்குகளை வைத்துள்ள புரோசஸ் என்வி, பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக் மற்றும் சோபினா எஸ்ஏ ஆகிய 4 நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டின. இதில் பைஜு’ஸ் ரவீந்திரனை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
அந்நியச் செலாவணி மோசடி: இதற்கிடையே, பைஜு’ஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.
அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் ரூ.944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகளில் அந்த நிறுவனம் வரவு வைத்துள்ளது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்நிய நேரடி முதலீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்வதில் பைஜூஸ் தாமதம் செய்வதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டியது.
அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ் பல சவால்களை சந்திக்கத் தொடங்கியது. அதில் முதலாவது பைஜூஸ் தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது எனத் தொடரப்பட்ட வழக்குகள். அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்தது என்று குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தன.
ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு முதலீடும் அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இந்த சரிவால் தான் ரூ.17,545 கோடி சொத்து மதிப்பில் இருந்து தற்போது ஜீரோ சொத்து மதிப்புக்கு குறைந்துள்ளார் பைஜு ரவீந்திரன்.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago