என்னுடன் பணிபுரிவது மிகவும் கடினம் ஏன்? - செபி தலைவர் மாதவி புரி விளக்கம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவர் மாதவி புரி தன்னுடன் பணிபுரிவது சக பங்குச்சந்தை அமைப்பு ஊழியர்களுக்கு மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவரான மாதவி புரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஐஐஎம் மாணவர்களிடம் அவர் பேசியதாவது:

இதுவரை என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களானாலும், எனக்கு உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்களானாலும் ஒன்றை அறுதியிட்டுச் சொல்வார்கள். என்னுடன் பணிபுரிவது மிகவும் கடினம் என்பதுதான் அது. ஏனென்றால் நான் எளிதில்எனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒரு சிக்கலை அடியாழம்வரை அலசி ஆராயும் வரை நான் பின்வாங்க மாட்டேன்.

என்னுடன் சேர்ந்து சிக்கலுக்குத் தீர்வு காண்பதென்பது வெங்காயத்தை உரிப்பது போன்றது. அதைச் செய்ய முற்படுபவர்கள் அழுதுவிடுவார்கள். வெங்காயத்தின் அத்தனை தாள்களையும் உரித்து முடித்த பிறகுதான் வேறெந்த சிக்கலையும் நாம் மிச்சம் வைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவரும்.

தாரக மந்திரம்: ஒரு விஷயம் சரியென்று முடிவெடுத்துவிட்டால் அது எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் அதை முழுவதுமாக செய்து முடிப்பேன். இதுவே எனது தாரக மந்திரம். இந்த மந்திரம் மிகவும் எளிதானது.

ஏனென்றால் இதை பின்பற்றினால் எப்படியும் பத்தில் எட்டு முறை வெற்றி உறுதி. தவறவிட்ட இரண்டுக்காக நீங்கள் நிச்சயம் வருந்த மாட்டீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE