தருமபுரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் நுங்கு!

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: கோடை வெயிலுக்கு இதம் தரும் நுங்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது.

கிராமங்களில் பல இடங்களில் விளைநிலங்களின் வரப்புகளில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் இவ்வாறு விளை நிலங்களில் அதிக அளவில் காணப்பட்ட பனை மரங்கள் விறகு தேவைக்காகவும், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போதும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியர்கள் முதல் ஆங்கில மருத்துவர்கள் வரை அனைவரும் பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் ஒரு சிறந்த உணவு என்றே பரிந்துரை செய்கின்றனர்.

சித்த மருத்துவர் சந்திரசேகரன் பனை குறித்து கூறும்போது, ‘பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பதநீர், நுங்கு, பனம்பழம், பனைவெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தேகத்தை வைரம் பாய்ந்த நிலைக்கு உயர்த்தும். அதாவது, எளிதில் பெருநோய்கள் நெருங்காத, நீண்ட ஆயுள் கொண்டதாக மனித வாழ்வை மாற்றும். இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான பனைமரங்கள் இருந்தன. அதில் சுமார் 50 சதவீதம் மரங்கள் தமிழகத்தில் மட்டும் இருந்தன.

தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு காரணங்களால் பனைகள் அழிக்கப்படுகிறது. மனிதகுலம் ஆரோக்கியம் நிறைந்த நல்வாழ்வை பெற, எஞ்சியுள்ள பனைகளை காத்து அவற்றில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் வழக்கத்துக்கு மாற வேண்டும்’ என்றார். வழக்கமாக கோடை காலத்தில் அறுவடைக்கு வரும் நுங்கு தற்போது பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.10-க்கு 5 கண் நுங்குகள் கிடைத்து வந்தன.

பனைமரங்கள் அழிப்பு, பனைத் தொழிலாளர்கள் குறைவு, போக்குவரத்து செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் நடப்பு ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20-க்கு 3 கண் நுங்குகள் விற்கப்படுகின்றன. இதர மாவட்டங்களில் இந்த விலையில் வேறுபாடும் நிலவுகிறது. அதே போல, கோவா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் சூழலுக்கு ஏற்ப மேலும் அதிக விலைக்கு நுங்கு விற்பனை செய்யப் படுகிறது. எனவே, வியாபாரிகள் தருமபுரி மாவட்ட விளைநிலங்களில் கிடைக்கும் நுங்கு காய்களை வாங்கி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இது குறித்து வியாபாரி கண்ணையன் கூறும்போது, ‘நுங்கு சில மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொருள். வெயில் காலத்தில் உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நகரங்களில் உள்ளவர்கள் நுங்கை விரும்பி வாங்கி உண்கின்றனர். பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் உள்ளூர் தேவைக்கு போக மீதியுள்ள நுங்குக் காய்களை அங்குள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE