ஜாக் மா வயது ஏழு. சீனாவில் பல அடிப்படை மாற்றங்கள். இந்த மாற்றங்கள் தங்கள் மகனை உச்சத்துக்குக் கொண்டுபோகும் ஏணி என்று அவன் அப்பா, அம்மா கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
சீனாவை சியாங் காய் ஷேக் (Chiang kai-shek) என்னும் ராணுவத் தலைவர் அமெரிக்க ஆதரவோடு ஆண்டார். கம்யூனிஸ்ட்கள் உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்கள், 1949 – இல் ஆட்சியைப் பிடித்தார்கள். சீன மக்கள் குடியரசு என்னும் பொதுவுடைமை தேசம் மாசே துங் தலைமையில் பிறந்தது. சியாங் காய் ஷேக் தாய்வான் பகுதிக்குத் தப்பி ஓடினார். தன் நாட்டுக்குச் சீனக் குடியரசு என்று பெயர் வைத்தார். தன் நாடுதான் நிஜச் சீனா என்று முழங்கினார். அமெரிக்கா ஒத்து ஊதியது. சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது. இதனால், சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே வியாபாரம், விளையாட்டு, தூதர்கள் ஆகிய எந்தத் தொடர்பும் இல்லை.
1949 - இல் தொடங்கிய சீன - அமெரிக்கப் பனிப்போர் தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்குமிடையே சித்தாந்தக் கருத்து வேறுபாடுகள். இதன் பரிணாம வளர்ச்சியாக எல்லைப்போர்கள். கலாசாரப் புரட்சி நடவடிக்கைகளால் சீனா பொருளாதார வீழ்ச்சி கண்டது. மீட்சிக்காக, அமெரிக்காவோடு நட்புறவு கொள்ள மாசே துங் விரும்பினார். அரசியல் பலம், வியாபார வளர்ச்சி ஆகிய ஆதாயங்களுக்காக தாய்வானைப் புறம் தள்ளிவிட்டுச் சீனாவோடு கை கோர்க்க அமெரிக்கா சமிக்ஞை காட்டியது.
1971. ஆரம்பம். பிங் பாங் ராஜதந்திரம் ( Ping Pong Diplomacy) என்று வரலாற்றுப் புகழ் பெற்ற ஒப்பந்தம். (பிங் பாங், டேபிள் டென்னிஸ் ஆகிய இரண்டுமே, மேசைப் பந்தாட்டத்தின் மறு பெயர்கள்.) ஜப்பானில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில், சீன, அமெரிக்க விளையாட்டு வீரர்கள் சந்தித்தார்கள். இதைச் சாக்காக வைத்து, மாசே துங் ஆசீர்வாதத்தோடு, சீன டேபிள் டென்னிஸ் அமைப்பு அமெரிக்க அணியைத் தங்கள் நாட்டுக்கு அழைத்தது. ஏப்ரல் 1971. ஒன்பது வீரர்கள் போனார்கள். சென்ற இடமெல்லாம் வரவேற்பு
இந்த ஊக்கத்தில் மாசே துங் அடுத்த அடி எடுத்துவைத்தார். சீனாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு அதிகாரபூர்வ அழைப்பு விடுத்தார். 1972 – இல் நிக்சன் வந்தார். அவர் மூன்று நகரங்களுக்கு விஜயம் செய்வதாக இரு தரப்பு ஆலோசகர்களும் முடிவு செய்தார்கள், அந்த நகரங்கள்,
பீக்கிங், ஷாங்காய், ஹாங்ஸெள. ஆமாம், ஜாக் மாவின் ஊர் ஹாங்ஸெள இந்த மூன்றில் ஒன்று. நிக்சன் பிப்ரவரி 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சீனாவில் செலவிட்டார். தாய்வான் பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தைகளின் மூலமாக மட்டுமே தீர்வு காணவும், அதுவரை காத்திராமல் வியாபாரத் தொடர்புகளை வளர்க்கவும், இரு நாடுகளும் முடிவெடுத்தார்கள். ``உலகை மாற்றிய ஒரு வாரம்” என்று நிக்சன் குறிப்பிட்டார். நிஜம். சீனா இன்று வல்லரசாக வளர்ந்துகொண்டிருப்பதற்கு, இந்த 1972 சந்திப்புத்தான் முக்கிய காரணம்,
நிக்சன் விஜயம் நீண்ட காலத்துக்கு உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இதுவரை மர்ம தேசமாக இருந்த சீனாவைப் பார்க்க ஏராளமானோர் விரும்பினார்கள் இரும்புக் கோட்டையாக இருந்த சீனா தன் கதவுகளை மெள்ளத் திறக்கத் தொடங்கியது. விசா கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினார்கள். இவர்கள் போன முக்கிய இடங்கள் – நிக்சன் விஜயம் செய்த அதே பீக்கிங், ஷாங்காய், ஹாங்ஸெள.
சீனாவில் அப்போது ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவு. ஆங்கிலம் பேசும் இந்தச் சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் மக்கள் அதிசயப் பிறவிகளாகப் பார்த்தார்கள். ஆங்கிலத்தில் பேசப் பலரும் விரும்பினார்கள். இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யப் பல ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிப் பள்ளிகள் முளைத்தன. ஜாக் மா பள்ளியில் ஆங்கிலம் படித்தான். அந்த மொழி மீது ஏனோ விருப்பம் வந்தது. ஆங்கிலப் புத்தகங்கள் படிக்குமளவு மொழியறிவு வரவில்லை. சீன வானொலியில் ஆங்கிலக் கதைப் புத்தகங்களைப் படிப்பார்கள். அதை ஆர்வத்தோடு கேட்பான். பேச்சுமொழி ஆங்கிலம் புரியத் தொடங்கியது. அவனுக்குத் தாட்பூட் இங்கிலீஷ் பேசவும், வெள்ளைக்காரர்களோடு பேசிப் பழகவும் ஆசை. பயிற்சிப் பள்ளிகள் வசூலித்த ஃபீஸ் தர அவன் வீட்டில் வசதி இல்லை.
படிப்பில் விருப்பமே இல்லாத மகன் எதிலோ ஆர்வம் காட்டுகிறான், அதிலாவது அவன் வருங்காலம் இருக்கட்டும் என்று மா லைஃபா நினைத்தார். வெறும் கையால் முழம் போடும் வழி கண்டுபிடித்தார். அந்த வழி……
ஹாங்ஸெள நகரில் கோல்டன் மவுன்ட்டன் ஹோட்டல் (Golden Mountain Hotel). முக்கிய சுற்றுலாத் தலமான மேற்கு ஏரியின் அருகே இருக்கிறது. நிக்சன் தங்கிய ஆடம்பர ஹோட்டல் என்பதால், வசதி கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவது இங்கேதான். ஊரைச் சுற்றிக்காட்ட இவர்களுக்கு ஒரு வழிகாட்டி (Guide) வேண்டும். பணம் எதுவும் வாங்காமல் மகன் இந்த கைடு வேலை செய்தால்…. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பயணிகளுக்கு ஊர் பற்றித் தெரிந்துகொள்ள முடியும், மகனுக்கும் ஆங்கிலம் பேசுவதில் பயிற்சி கிடைக்கும்.
மா லைஃபா அரைகுறையாக எதிலும் இறங்குவதில்லை. மகனைத் தயார்ப்படுத்தவேண்டும், கைடு வேலையை அவன் கன கச்சிதமாகச் செய்தால்தான் தொடர்ந்து அவனிடம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அதற்கு, ஹாங்ஸெள நகரம், மேற்கு ஏரி ஆகியவற்றின் பாரம்பரியப் பெருமை அவனுக்குத் தெரிய வேண்டும். இதற்காகப் பாட்டியோடு அவனைப் புத்தமத கோயில் களுக்குப் போய்வரச் சொன்னார். The Water Margin என்னும் புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ஸாங் ஜியாங் (Song Jiang), அவருடைய சகாக்களின் சாகசங்களை விவரிக்கிறது. சீனாவின் பண்டைய காலத்துக்கு ஒரு கண்ணாடி.
மா லைஃபா ஒன்பது வயது மகனை அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார். கோல்டன் மவுன்ட்டன் ஹோட்டலுக்கு சைக்கிளில் வருவார். அவரோடு இன்னொரு சைக்கிளில் மகன். அவர் தன் போட்டாகிராஃபி வேலையைப் பார்த்தால்தானே வீட்டில் அடுப்பு எரியும்? ஆகவே, கிளம்பிப் போய்விடுவார். அவன் 40 நிமிட சைக்கிள் மிதித்தலின் சோர்வோடு இருப்பான். ஆனால், ஆங்கிலம் படிக்கும் ஆசையில் களைப்பு மறந்தே போகும்.
ஹோட்டல் வாசலில் போய் நிற்பான். வெளியே வரும் சுற்றுலாப் பயணிகளிடம் போவான்.
“நான் உங்கள் கைடாக வெஸ்ட் லேக் சுற்றிக் காட்டட்டுமா? ஃப்ரீ.”
சிங்கிளீஷ் (சீனம் + இங்கிலீஷ்) உச்சரிப்பு. புது ஊர். புரியாத மொழி. தெரியாத பொடிப் பையன். இலவசமாக இவன் ஏன் ஊர் சுற்றிக் காட்டவேண்டும்? ஏதாவது ஏமாற்று வேலையோ? பலர் தயங்கினார்கள். சிலர் சம்மதித்தார்கள். அவனோடு வந்தார்கள். பிரமித்துப் போனார்கள், இலக்கணப் பிழைகள் இருந்தாலும், ஆங்கிலம் சரளமாகப் பேசினான். லொட லொட பேச்சு. ஒவ்வொரு இடத்தையும் பற்றிச் சொல்லும் விவரங்கள், அடிக்கடி ஜோக்ஸ், அந்தச் சிரிப்பு…… அனைவருக்கும் அவனிடம் பிடித்த இன்னொரு விஷயம், நேர்மை. மற்ற கைடுகள்போல் அவன் ரீல் விடவில்லை. ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால். “சாரி. ஐ டோண்ட் நோ,”
சுற்றுலாப் பயணிகள் அவனைத் தேடி வரத் தொடங்கினார்கள். பலர் டிப்ஸ் தந்தார்கள். வாங்க மறுத்தான். அவனுக்குத் தேவை பணமல்ல, ஆங்கிலப் பேச்சறிவு. கணிசமாகவே இது கிடைத்தது. பள்ளி நாட்களில் காலையிலும், விடுமுறை நாட்களில் முழு நாளும் கைடு வேலை. இத்தனைக்கும் நடுவில் அவனுக்குப் பெரிய நண்பர்கள் கூட்டம், அவர்களோடு வம்பளப்பதுதான் அவன் பொழுதுபோக்கு.
பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது. சீனாவில் 1980 காலகட்டத்தில் கல்லூரிகள் குறைவு. பள்ளிப் படிப்பை முடித்த அனைவருக்கும் சீட் கிடைக்காது. நுழைவுத்தேர்வு. சீன மொழி, இன்னொரு அந்நிய மொழி, கணிதம் ஆகிய மூன்றிலும் பரீட்சை. மொத்தம் 120 மார்க். 70 சதவீதம், அதாவது 120 – க்கு 84 மார்க் வாங்கினால்தான் சீட். இல்லையா, இன்று போய் அடுத்த வருடம் வா.
அவன் சீனம், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்றிலும் தேர்வு எழுதினான். ரிசல்ட்?
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago