அ
ன்றைய சீனாவில் இங்கிலீஷ் கார்னர் ( English Corner) என்னும் அமைப்புகள் இருந்தன. ஆங்கிலத்தில் உரையாடும் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொரு வாரமும் சந்திப்பார்கள். இங்கே ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும். அடுத்தவர் பேச்சை ஆக்கபூர்வமாக விமர்சிப்பார்கள். வெளியில் பேசினால் யாராவது கேலி செய்வார்களோ என்னும் பயம் போய்விடும். ஜாக் மா தன் வொய் எம் சி ஏ ( YMCA ) மாணவர்களுக்காக புதன்கிழமை இரவுகளில் சந்திக்கும் இங்கிலீஷ் கார்னர் கிளை தொடங்கினார். அங்கே, பல புதுமையான பரிசோதனைகள். மின்விளக்குகளை அணைத்துவிடுவார். ஆங்கிலத்தில் பேசுவதற்கு மொழி அறிவைப்போல் தைரியமும் அவசியம். கூச்சத்தை வெல்ல இருட்டு உதவும் என்பது அவர் கண்டுபிடிப்பு. இங்கிலீஷ் கார்னர் வகுப்புகளுக்குக் கட்டணம் கிடையாது. ஜாக் மா தன் கணிசமான நேரத்தைச் செலவிட ஒரே காரணம், தன் ஆங்கில அறிவைப் பலரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் நல்லெண்ணம் மட்டும்தான். ஆனால், எதிர்பாராத வருமானம் கிடைத்தது – நூற்றுக்கணக்கான மாணவர்களின் அன்பு, மரியாதை.
ஒரு பொன்மாலைப் பொழுது. ஒரு இளைஞியும், மூதாட்டியும் வந்தார்கள். வகுப்பில் சேரும் விண்ணப்பப் படிவம் கேட்டார்கள். ஜாக் மா கொடுத்தார். அந்தப் பெண் படிவத்தை நிரப்பினாள்.
வயது – 20
வகுப்பில் சேருவதற்கான காரணம் – நல்ல வேலை கிடைக்க.
ஜாக் மா படிவத்தை வாங்கிக்கொண்டார்.
“தாங்க் யூ. நீங்கள் இன்று முதலே வகுப்புக்கு வரலாம்.”
இப்போது அந்த மூதாட்டி, ``இன்னொரு ஃபார்ம் தாருங்கள்.”
எதற்காக என்று ஜாக் மாவுக்குத் தெரியவில்லை. கொடுத்தார். மூதாட்டி நிரப்பத் தொடங்கினார்.
வயது – 80
வகுப்பில் சேருவதற்கான காரணம் –
1. பேத்தியை வகுப்புக்குத் தனியாக அனுப்ப வேண்டாம் என்பதற்காக.
2. மாலையில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் புதிதாக ஏதாவது படிக்க.
ஜாக் மா அசந்துபோனார், எண்பது வயதில் இத்தனை அறிவுத்தேடலா?
பாட்டியும், பேத்தியும் வகுப்புக்கு வந்தார்கள். பெயர் சொல்லி மூதாட்டியைக் கூப்பிட ஜாக் மாவுக்குத் தயக்கம். Grandmother என்பதன் சுருக்கமாகத் திருமதி ஜி (Mrs. G) என்று அழைக்கத் தொடங்கினார். எல்லோருக்கும் திருமதி ஜி ஆனார். நமக்கும் ஜி பாட்டி.
ஜி பாட்டிக்கு முதுமை காரணமாக இரவில் சரியாகத் தூக்கம் வராது. இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். வகுப்பில் படித்த புதிய ஆங்கில வார்த்தைகளை உருப்போடுவார். இதனால் விரைவில் முதல் மாணவியானார். ``எண்பது வயதுப் பாட்டி படிக்கும்போது, உங்களால் முடியாதா?” எனப் பிற மாணவர்களுக்குக் காட்டும் எடுத்துக்காட்டானார். ஆசிரியர் – மாணவி என்பதைத் தாண்டி, இருவருக்குள்ளும் பாட்டி – பேரன் பாசம்.
ஹாங்ஸெள நகரின் தொலைக்காட்சி சேனல் ஜாக் மாவின் வொய் எம் சி ஏ வகுப்புகள் பற்றி நிகழ்ச்சி தயாரித்தார்கள். ஒளிபரப்பானதும், மக்கள் மனங்களில் சூப்பர் ஸ்டார் ஜாக் மா அல்ல, ஜி பாட்டி.
******
ஜாக் மாவின் நாட்களில் மட்டும் 30 மணி நேரமோ? எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட், வொய் எம் சி ஏ ஆசிரியப் பணிகள், அவற்றுக்கான முன்னேற்பாடுகள், இவற்றை முடித்தபின்னும் அவருக்கு நேரம் இருந்தது. பியானோ வாசிக்க கற்றுக்கொண்டார். ஹாங்ஸெள வானொலி நிலையத்தில் ஆஙகிலப் பாடல்கள் ஒலிபரப்பு தொடங்கினார்கள். அவர்களுடைய முதல் ரேடியோ ஜாக்கி நம் ஹீரோதான். சீனா தன் கதவுகளைச் சர்வதேச வணிகத்துக்குத் திறந்துகொண்டிருந்தது. இந்தத் துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று ஜாக் மா கணக்குப் போட்டார். ஏற்றுமதி – இறக்குமதி பகுதிநேரப் படிப்புக்குச் சேர்ந்தார்.
காதலி காத்திக்கும் ஜாக் மா வேலை பார்த்த இன்ஸ்டிடியூட்டில் ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது. இருவர் சம்பளம் குடும்பம் நடத்தப் போதும். வீட்டார் சம்மதத்தோடு கல்யாணம் தந்துனானே. ஜாக் மாவின் சக ஆசிரியர்கள் கல்லூரிக் குடியிருப்புகளில் வாடகைக்குத் தங்கியிருந்தார்கள். ஓய்வு பெறும்போது காலி செய்யவேண்டும். சொந்தக் கூரைக்குத் திண்டாடவேண்டும். ஜாக் மா சேமிப்பை நம்புபவர். வீடு வாங்க வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தார். முன்தொகை 18,000 டாலர்கள் தரக் கையில் பணமில்லை. கென் மார்லி கல்யாணப் பரிசாக இந்தப் பெரும் தொகையைத் தந்தார். இத்தனைக்கும் அவர் கோடீஸ்வரர் அல்ல, நடுத்தர வர்க்கம். ஆஸ்திரேலியாவில் யோகா ஆசிரியர். ஜாக் மா பின்னாட்களில் சொன்னார்,``கென் மார்லியின் உதவிகளுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.” வார்த்தைகள் இல்லாததால், செயலில் காட்டினார். 1992 – இல் முதல் குழந்தை. அவனுக்கு மா யுவான்க்கின் (Ma Yuankun) என்று பெயர் வைத்தார். ``மா” குடும்பப் பெயர்; “யுவான்க்கின்”, “கென்” என்பதன் சீனமொழி வடிவம். இதை மிஞ்சிய சல்யூட் வேறென்ன இருக்கமுடியும்?
1994. ஜாக் மா வயது 30. ஆங்கில ஆசிரியராகத் தொடர்ந்தால் சம்பாதிக்கப்போவது மரியாதை மட்டுமே, செல்வமல்ல என்று தெளிவாகத் தெரிந்தது. சொந்த பிசினஸ் தொடங்க முடிவெடுத்தார். இரண்டு அளவுகோல்கள், அந்த பிசினஸில் தனக்குத் தனித்திறமை இருக்கவேண்டும்; அந்த பிசினஸுக்கு வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கவேண்டும், சீனாவின் வெளிநாட்டு வியாபாரம் தலை தூக்கத் தொடங்கியிருந்தது. கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து சீனத்துக்கும் மொழிபெயர்க்கும் அன்றாடத் தேவை. ஏற்றுமதி- இறக்குமதி வளர, வளர, இந்தச் சேவையின் தேவையும் அதிகமாகும்,
மனைவியிடம் பேசினார். அவரும் சம்மதம். பிசினஸ் காலூன்றும் வரை குடும்பச் செலவை ஓட்ட வேண்டுமே? தான் கல்லூரி வேலையைத் தொடர்ந்தார். தன்னிடமும், மனைவியிடமும் இருந்த கையிருப்பைப் புரட்டினார். ஜனவரி 1994. ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு பழைய சர்ச்சின் முன்னால், பட்டாசுகள் வெடித்தன, அங்கிருந்த 320 சதுர அடி வாடகை அறையில், ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி (Hanghou Haibo Translation Agency)* தொடக்கம். அன்றைய கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. ஓய்வூதியம் குறைவோ குறைவு. ஓய்வு பெற்ற ஐந்து ஆங்கில ஆசிரியர்களை மொழி பெயர்ப்பாளர்களாக நியமித்தார்.
* சீன மொழியில் ஹைபோ என்றால், நம்பிக்கை, பரந்து விரிந்த கடல் என்று இரண்டு அர்த்தங்கள். அரசுவேலையை விட்டுச் சொந்த பிசினஸ் தொடங்குவதை, கடலில் குதிப்பது என்று கேலி செய்வார்கள். கம்பெனி பெயர் ஜாக் மாவின் ஆக்கபூர்வச் சிந்தனை, தன்னைத்தானே கேலி செய்துகொள்ளும் நகைச்சுவை உணர்வு ஆகிய இரண்டு குணங்களையும் காட்டுகிறது.
ஜாக் மாவின் நட்பு வட்டம் தாமாகவே உதவிக்கு வந்தார்கள். பழைய மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் கம்பெனியின் விளம்பரப் பதாகைகள் ஏந்தி வலம் வந்தார்கள். தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பரிந்துரைத்து ஆர்டர்கள் சேகரித்தார்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமலே. நட்புக்காக. குறிப்பாக ஜி பாட்டி. சொந்தக் கம்பெனியாக இருந்தால்கூட இத்தனை உழைத்திருக்க மாட்டார். கம்பெனிகளுக்குப் போய் ஆர்டர் வாங்கி வருவதாகச் சொன்னார். அவரிடம் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். மூதாட்டிக்கு இது சிரமமான வேலை என்று ஜாக் மா மறுத்தார். பாட்டி பதில்,``என் வேலை சுலபம். ஏன் தெரியுமா? நீங்கள் போய் ஆர்டர் கேட்டால் அவர்கள் மறுக்கலாம். எண்பது வயதுக் கிழவிக்கு மாட்டேன் என்று சொல்லவே மாட்டார்கள்.”
ஜாக் மா என்ன பதில் சொல்லுவார் ? சம்மதித்தார்.
சில வருடங்கள் ஒடின. ஜி பாட்டிக்குக் குடல் சம்பந்தமான பல பிரச்சினைகள் வந்தன. மூன்று சிக்கலான அறுவை சிகிச்சைகள். வயதான உடல் எத்தனைதான் தாங்கும்? மரணம். மாணவர் கூட்டத்தோடு ஜாக் மா இறுதிச் சடங்குகளில் பங்கேற்றார். அஞ்சலி செலுத்த நடந்த கூட்டத்தில் பேசினார், ``ஜி மறைந்தாலும், எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நாம் வருத்தப்படக்கூடாது, சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது அவர் ஆசை. அவரோடு செலவிட்ட அழகான தருணங்களை நினைத்துப் பார்ப்போம். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.”
ஜி பாட்டி சாம்பலைப் பாரம்பரிய மேற்கு ஏரியில் கரைத்தார்கள். ஆனால், அவர் நினைவுகள் ஜாக் மா நெஞ்சில் நிரந்தரம்.
ஜாக் மா ஒருமுறை சொன்னார், ``எனக்குத் தொழில்நுட்பத் திறமை கிடையாது. கம்ப்யூட்டர்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆச்சரியம். நான் உலகத்தின் பெரிய ஆன்லைன் கம்பெனி நடத்துகிறேன்.”
தன்னடக்கத்தோடு இதைச் சொன்னாலும், இந்த வார்த்தைளில் கொஞ்சம் உண்மை உண்டு. அப்படியானால், அலிபாபாவின் வெற்றி ரகசியம்? ஜி பாட்டிபோன்ற நல்ல உள்ளங்களின் நட்பு.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago