சி
ல மாதங்களுக்கு முன்பு `டை சென்னை’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பலர் சிறப்பாக உரையாற்றினாலும் ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் ஷா உரையும் அவரின் பின்னணியும் வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கில் (மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில்) பணியாற்றிவந்த இவர், சென்னையில் உள்ள குடும்ப நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டிய சூழல் உருவானது. தற்போது மூன்று மாநிலங்களில் ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் செயல்பட்டு வருகிறது. அவருடனான ஒரு உரையாடலில் இருந்து...
மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு கண்ணாடி கடையை நடத்த வேண்டும் என்னும் சூழல் ஏன் உருவானது?
அமெரிக்காவில் வேலை செய்த பிறகு இந்தியாவில் வேலை செய்யலாம் என நினைத்துதான் இந்தியா வந்தேன். இந்தியாவில் ஒரு இன்வெஸ்ட்மென்ட் பேங்கில் பணியாற்றினேன். இங்கு நிறுவனங்கள் மற்றும் துறைகளை ஆய்வு செய்வதுதான் என் பணி. 2005-ம் ஆண்டு அப்பா ஒரு கண்ணாடி கடையை ஆரம்பிக்க திட்டமிட்டார். அவருக்கு உடல் நலன் சரியில்லாததால் உதவியாக இருந்தேன். இந்த பிஸினஸ் சுவாரஸ்யமாக இருந்தது. இரு ஆண்டுகள் அங்கு இருந்தேன். 2007-ம் ஆண்டு தனியாக ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் தொடங்கினேன். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. இருந்தாலும் எனக்கு இந்த பிஸினஸில் பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்.
தவிர இந்த பிஸினஸில் வெளிப்படைத்தன்மை இல்லை. கண்ணாடியில் விலை ஒட்டப்பட்டிருக்காது. குறைந்த விலை கண்ணாடி கிடைக்காத சூழல் இருந்தது. சேவைகள் மிகச் சிறப்பாக இல்லை. இந்த துறையில் பெரிய முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் இல்லை என்பதாலும் வாய்ப்பு இருந்ததாலும் இதில் இறங்கினேன்.
ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக இந்த தொழிலின் வாய்ப்பு குறித்து ஆராய்ச்சி செய்தீர்களா?
2005-ம் ஆண்டு கணிப்பின்படி ஆப்டிக்கல் பிரிவு 2,000 கோடி டாலர் வர்த்தகம் இருக்கும் துறையாக உயரும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது 300 கோடி டாலர் என்னும் அளவில் மட்டுமே வர்த்தகம் இருந்தது. கணிக்கப்பட்ட வளர்ச்சி இது. தவிர கண்ணாடிகளுக்கான தேவையும் உயர்ந்து வரும் என்பது என்னுடைய கணிப்பு. மொபைல் போன், தொழில்நுட்பம் வந்த பிறகு கண் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உருவாகும் என்பதையும் கணித்திருந்தேன். அப்போது நான் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த அத்தனை தொகையையும் விற்றுவிட்டுதான் முதல் கடையை ஆரம்பித்தேன்.
ஒருவர் கண்ணாடியை மாற்றும் விகிதம் எவ்வளவாக இருக்கிறது?
ஏற்கக்கூடிய விலையில் விற்பதால் எங்கள் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு இரு கண்ணாடிகளை வாங்குகின்றனர். முன்பு ஒரு ஜீன்ஸ் 5000 ரூபாய் என்னும் அளவில் இருந்தால் ஒன்று மட்டுமே வாங்குவார்கள். ஏற்புடைய விலையில் இருந்தால் ஒன்றுக்கும் மேல் வாங்குவார்கள். அதேபோலதான் கண்ணாடியும். முன்பு ஒரு கண்ணாடியை வைத்து வீடு அலுவலகம் என அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று வருவார்கள். ஆனால் தற்போது வீட்டில் ஒன்று அலுவலகத்தில் ஒன்றை வைத்துக்கொள்கிறார்கள்.
நீங்களே நிதி திரட்டி இருக்கிறீர்கள். அதன் பிறகு ஏன் பிரான்ஸைசி அடிப்படையில் விரிவாக்கம் செய்கிறீர்கள்?
நாங்கள் நிதி திரட்டினாலும், பிரான்ஸைஸி மூலம் விரிவாக்கம் செய்வதினால் மேலும் அதிக கடைகளைக் கொண்டு வர முடியும். தற்போது 125-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 500 கடைகளைத் திறக்க வேண்டும் என்பது எங்களின் திட்டம். ஆரம்பத்தில் 100 பிரான்ஸைசிகளை மட்டுமே கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். மற்ற பிரான்ஸைசிகளும் எங்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. எங்களிடத்தில் பிரான்ஸைசி வாங்குபவர்கள் அந்த கடைக்கான முதலீட்டின் ஒரு பகுதியை மட்டுமே செய்வார்கள். அந்த கடையை முழுமையாக நடத்துவது நாங்கள்தான். பிரான்ஸைசி எடுப்பவர்களுக்கு இது ஒரு முதலீட்டு வாய்ப்பு. ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கு லாபத்தில் பங்கு வழங்கப்படும்.
சில்லரை வர்த்தகத்தில் ஆன்லைன் குறித்த அச்சம் இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளுக்கு பிறகு கணிசமான சந்தை ஆன்லைன் நிறுவனங்கள் வசம் செல்லும் என்னும் கணிப்பு இருக்கிறது. உங்கள் துறையில் எப்படி?
உங்களுடைய சட்டை, பேண்ட், காலணி உள்ளிட்டவற்றுக்கு அளவு இருக்கிறது. ஆனால் கண்ணாடிக்கு அளவு இல்லை. நீங்கள் நேரடியாக போட்டுப்பார்த்து உணரும் பட்சத்திலேதான் வாங்க முடியும். லென்ஸ்கார்ட் நிறுவனமும் அதிக கடைகளை திறக்கத் தொடங்கி இருக்கிறது. லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் வாங்கும் கண்ணாடிகள் அதிகளவில் திரும்பி வரத்தொடங்கி இருப்பதால், அந்த நிறுவனமும் கடைகளை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிஸினஸ் மாடல் ஆன்லைனில் வெற்றியடையவில்லை.
பிரேம் மட்டும் சீனாவில் இருந்து மொத்தமாக வாங்குகிறீர்கள். நீங்களே இங்கு தயாரிக்க முடியாதா?
பிரேம்களில் பல வகையான பொருட்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பிரேமுக்கும் தனியாக தொழிற்சாலை இருக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனா உலகத்துக்கே சப்ளை செய்கிறது. உற்பத்தி செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு வகையான பிரேமுக்கும் ஒரு ஆலை ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் விலை அதிகரிக்கும்.
எவ்வளவு நபர்களுக்கு கண் சார்ந்த பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.?
2014-ம் ஆண்டில் 40 சதவீத நபர்களுக்கு கண் சார்ந்த பிரச்சினை இருந்தது. ஆனால் தற்போது 75 சதவீத நபர்களுக்கு கண் பார்வை பிரச்சினை இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில் பலருக்கும் பிரச்சினை இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
22 mins ago
வணிகம்
3 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago