‘Pure Veg Mode’ - சைவ உணவு பிரியர்களுக்கான சொமேட்டோவின் பிரத்யேக சேவை

By செய்திப்பிரிவு

குருகிராம்: சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தங்களது சுத்த சைவ உணவு பிரிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘Pure Veg Mode’ என்ற சேவையை தொடங்கியுள்ளது. இதில் சைவ உணவுகளை மட்டுமே தயாரித்து, விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் அதன் மெனுக்கள் மட்டும் லிஸ்ட் செய்யப்படும்.

இதனை சைவ உணவு பிரியர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் இது பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், நேரடியாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருப்பார்கள். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

இதில் சொமேட்டோ நிறுவனமும் ஒன்று. தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சேவைகளை இந்நிறுவனம் அறிவிக்கும். அந்த வகையில் தற்போது ‘Pure Veg Mode’ அறிவிக்கப்பட்டுள்ளது. உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் பிரதிநிதிகளும் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என சொமேட்டோ தெரிவித்துள்ளது.

இவர்கள் பச்சை நிற சீருடை மற்றும் பையை பயன்படுத்துவார்கள். இந்த உணவகங்களில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை தயார் செய்து வழங்காத உணவகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொமேட்டோவின் இந்த நகர்வு சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இதர தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE