அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள்தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்டவந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்போது 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில், சதாரண வந்தே பாரத் ரயில் ( அம்ரித் வந்தே பாரத் ரயில் ) தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு சாதாரண் வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுன. இந்த ரயிலில், இரு புறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, 8 முன் பதிவு இல்லாத பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏசி பிரிவில் 12 பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ரயில்கள் தர்பங்காவில் இருந்து அயோத்தி வழியாக ஆனந்த் விஹாருக்கும், மால்டா நகரத்திலிருந்து பெங்களூருவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அம்ரித் பாரத் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ஐசிஎஃப்-ல் 492 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன

2024 - 25ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளில் மொத்தம் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. ஏசி அல்லாத ரயில்களில் பயணிக்க விரும்பும் மக்களை இலக்காகக் கொண்டு, சிறந்த வசதிகளுடன் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பல வழித் தடங்களில் விரைவு ரயில்களில் பொதுவகுப்பு பெட்டிகள் தேவைப்படுவதால், இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. புதிய ரயில்களில் கழிப்பறைகளில் மேம்பட்ட வடிவமைப்பு, சிசிடிவி கேமராக்கள், தூங்கும் வசதி, பெட்டிகளின் மேல் படுக்கைக்கு எளிதாக செல்ல வசதி உள்பட பல்வேறு வசதிகள் இடம் பெற உள்ளன. சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலை, ரயில்வேயின் நவீனப் பெட்டித் தொழிற்சாலை ஆகிய ஆலைகளில் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE