ஆன்லைன் ராஜா 02: அமேசானா, அலிபாபாவா?

By எஸ்.எல்.வி மூர்த்தி

 

ண்ணாடியும், மார்பிளும் இழைத்த பளபள மாட மாளிகை. ஏசி அறைகள். ஒவ்வொரு அங்குலத்திலும் ஆடம்பரம். ஹோம் தியேட்டர். வாசலில் ஆடி பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஹம்மர், லெக்சஸ், மாஸெரெட் என வகை வகையாய்க் கப்பல் ரகக் கார்கள். அன்பு மனைவி. பாசக் குழந்தைகள். உங்கள் சாதனையில் சந்தோஷ உச்சிக்குப் போகும் அம்மா, அப்பா. சேவை புரிந்திடச் சேவகர் ஆயிரம். இதுதானே உங்கள் கனவு? இதை நனவாக்க, நான் தரட்டுமா லட்டு ஐடியா?

இணையதள விற்பனை தொடங்குங்கள். ஐயய்யோ, கம்ப்யூட்டர் டெக்னிக்கல் சமாச்சாரம் எனக்குச் சுட்டுப்போட்டாலும் வராது என்று ஒதுங்காதீர்கள். பசங்க முதல் பாட்டி வரை, ஸெர்ச், இ-மெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று திரியும் காலமிது. அத்தோடு, இணையதள விற்பனையில் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் கொஞ்சமே கொஞ்சம்தான்.

ஏன் இணையதள வியாபாரம்? இன்று இந்தியாவிலேயே அதிவேகமாக வளரும் துறை இதுதான். 2016 – இல் வருட விற்பனை 1,02,400 கோடி ரூபாய். அடுத்த ஐந்து வருடங்களில், அதாவது, 2021 – இல் இது நான்கு மடங்காக உயரும் – 4,09,600 கோடி ரூபாய்.

இதற்காக, அமேசான், பிளிப்கார்ட் போன்ற ராட்சசர்களோடு மோதச் சொல்லவில்லை. அவர்கள் நிழலில் ஒதுங்கச் சொல்கிறேன். புரியவில்லையா? இவர்களின் இணையதளங்களில் வியாபாரியாகுங்கள். என்னவெல்லாம் அனுகூலங்கள் தெரியுமா?

இணையதளத்தில் வியாபாரம் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது இத்தனை ஈசியா? என் பதில்கள் – “ஆமாம்”, “இல்லை.” தொடங்குவது செம ஈசி; வெற்றிகரமாக நடத்துவது மிகச் சிரமம். ஏன் அப்படி? எங்கெல்லாம் நுழைவு சுலபமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் போட்டிகள் கடுமையாக இருக்கும். அமேசானில் 41,15,48,523 பொருட்கள் விற்பனையாகின்றன. இதேபோல், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற ஒவ்வொரு இணையதளத்திலும். இந்தப் பல நூறுகோடிப் பொருட்களில், உங்கள் பொருளை வாடிக்கையாளர் தேடி வாங்கினால் மட்டுமே, உங்கள் பிசினஸில் பொன்மகள் வருவாள், பொருள் கோடி தருவாள்.

இதற்கு நீங்கள் வாடிக்கையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளையடிக்கவேண்டும். உங்களுடைய லட்சக்கணக்கான சக வியாபாரிகளும் இதையே முயற்சிப்பார்கள். இது போட்டியல்ல, போர். அவர்களை ஜெயிக்க ஒரே வழி, அவர்கள் எல்லோரிடமிருந்து தனித்து நிற்பது.

இது நீச்சல் கற்பது மாதிரி. நீங்களே குளத்தில் குதித்து, மூச்சுத்திணறிப் படிக்கலாம்; அல்லது ஒரு நீச்சல் வீரரைப் பின்பற்றலாம். இணையதள வியாபாரத்திலும் ஒரு சேம்பியனை வழிகாட்டியாக நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். இ காமர்ஸில், உலகளவில் நம்பர் 1 அமேசான். நம்பர் 2 அலிபாபா.

அமேசானின் ஜெஃப் பெஸோஸ், அலிபாபாவின் ஜாக் மா ஆகிய இருவருக்குள்ளும் எக்கச்சக்க வித்தியாசங்கள். நம் தேர்வு இருவரில் யார் சிறந்த தொழில் முனைவர் என்பதல்ல, இருவரில் நம் தேவைகளை யார் பூர்த்தி செய்வார் என்பதற்கு. இரு நிறுவனங்களோடும் ஒரு சுருக்கமான சந்திப்பு.

அமேசான்

அமெரிக்க கம்பெனி. தொடங்கியவர் ஜெஃப் பெஸோஸ். பணக்கார வீட்டுப் பிள்ளை. சிறுவயது முதலே, படிப்பில் முதல் மாணவர். விழித்திருக்கும் நேரமெல்லாம் கம்ப்யூட்டரோடு விளையாடுவார். பிரபல பிரின்ட்டன் பல்கலைக் கழகத்தில், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இரு துறைகளிலும் இளங்கலைப் பட்டம் வாங்கினார். அதிபுத்திசாலியைத் தேடி வந்தன பல வேலைகள். 28 - ஆம் வயதில், டி.ஈ.ஷா என்னும் நிதி ஆலோசனை நிறுவனத்தில் துணைத்தலைவர் பதவி. இந்தச் சிறு வயதில் இத்தனை உச்சாணிப் பதவி!

ஜெஃப் புதுப்புது விஷயங்களை நோண்டிக்கொண்டேயிருப்பார். 1991 –இல் இன்டர்நெட் அறிமுகமாகியிருந்தது. இதனால் பரிமாறப்பட்ட தகவல்கள் 2,300 மடங்கு, அதிகரித்திருப்பதைப் பார்த்தார். பிரமித்தார். இன்டர்நெட்டை வியாபாரத்துக்குப் பயன்படுத்தலாமே என்று நூதனமாக யோசித்தார். வேலையை விட்டார். 1995 – இல் புத்தக விற்பனையோடு அமேசான் தொடங்கினார். போட்டியாளர்கள் நினைத்துப்பார்க்கவே முடியாத விலை, அற்புதமான வாடிக்கையாளர் சேவை. சாம்ராஜ்ஜியம் அதிவேகமாக உருவானது. புத்தகம் வாசிக்கும் கிண்டில் எந்திரம், இ-புத்தகங்கள் எனப் பல புதுமைகளை அரங்கேற்றினார். இன்று 41 கோடிப்பொருட்கள். தினமும் சுமார் 5 லட்சம் புதிய பொருட்கள் இந்த அணிவகுப்பில் சேர்க்கப்படுகின்றன. அமேசானின் ஆண்டு விற்பனை 136 பில்லியன் டாலர்கள் (சுமார் 8,70,400 கோடி ரூபாய்)

அலிபாபா

1999 - இல் 18 நண்பர்களுடன் சேர்ந்து சீனாவில் ஜாக் மா தொடங்கிய கம்பெனி. அவர் ஏழைத் தொழிலாளிக் குடும்பம். படிப்பில் கடைசி பெஞ்ச். தட்டுத் தடுமாறிக் கல்லூரிப் படிப்பை முடித்தார். 31 - ஆம் வயதில்தான் முதன் முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தார். 33 - ஆம் வயதில்தான் சொந்தக் கம்ப்யூட்டர் வாங்கினார். பல நிலையில்லாத வேலைகள், பிசினஸ் தோல்வி. இன்று ஆண்டு வருமானம் 16 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,02,400 கோடி ரூபாய்).

நவம்பர் 11, 2017. அலிபாபாவின் 24 மணிநேர விற்பனைத் திருவிழா. வியாபாரம் 25.4 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,62,560 கோடி ரூபாய்). இந்த வருடம் ஜூலை 11 அன்று அமேசான் 30 மணிநேரத் திருவிழா நடத்தியபோது, மொத்த விற்பனை ஒரு பில்லியன் டாலர்கள் மட்டுமே. அதாவது, குறைந்த நேரத்தில் அலிபாபாவின் சாதனை 25 மடங்குக்கும் அதிகம். இந்தப் புயல்வேக வளர்ச்சியால், அலிபாபா அமேசானை பந்தயத்தில் முந்தி, முதலிடம் பிடிக்கும் நாள் அதிக தூரமில்லை.

இதுவரை, இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்கும் எல்லோரும் தெரிந்தோ, தெரியாமலோ, ஜெஃப் பிஸோஸின் யுக்திகளைத்தான் காப்பியடித்து வருகிறோம். இன்றைய நிலவரத்தில் இந்தியர்கள் நமக்கு யார் சிறந்த முன்னோடி. அமேசானா, அலிபாபாவா?

பிசினஸ் என்பது செடி வளர்ப்பது மாதிரி. போடும் உரம் செடிக்கும், அது வேரூன்றியிருக்கும் மண்ணுக்கும் சாதகம் தரவேண்டும், இதைப்போல்தான், பிசினஸில் உபயோகப்படுத்தும் மார்க்கெட்டிங் யுக்திகள் நம் பாரம்பரியத்தோடு முழுக்க முழுக்க ஒன்றிப்போகவேண்டும். அமேசான் அமெரிக்கக் கம்பெனி. அமெரிக்கர்களின் பொருட்கள் வாங்கும் நடைமுறைகள் நம்மிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. அமெரிக்கக் கலாச்சாரம் “செலவிடும் கலாச்சாரம்.”,பொருட்கள் வாங்குவது அவர்கள் பொழுதுபோக்கு. நாம் “சேமிக்கும் கலாச்சாரம்.” எந்தப் பொருளும் வாங்கும் முன்பும், ஆயிரம் தடவை ஆலோசிப்போம், கணக்குப் போடுவோம், பேரம் பேசுவோம். சீனாவிலும் மக்களின் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் நம்மைப்போல்தான். ஆகவே, இந்தியர்கள் நமக்கு அமேசானின் யுக்திகளைவிட அலிபாபாவின் வியூகங்களே பொருத்தமானவை.

நாம் எத்தனை வேகமாக பிசினஸ் கற்றுக்கொள்கிறோம் என்பதில், பயிற்சியளிப்பவரின் அணுகுமுறை மிக முக்கியம். ஜெஃப் பிஸோஸ் அறிவுஜீவி. அவர் தன் வெற்றி ரகசியங்களைச் சுலபமாக வெளியிடுவதில்லை. அப்படியே சொன்னாலும், கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் சாமானியர்கள் நம் அறிவுக்கு எட்டும். ஜாக் மா நேர் தலைகீழ். எளிமையாக, சுவாரஸ்யமாகப் பேசுவார். குட்டிக்கதைகள் சொல்லி, சிக்கலான சமாச்சாரங்களையும் புரியவைப்பார்.

ஒரு பிசினஸ்மேன்கள் கூட்டத்தில் அவர் சொன்ன கதை;

புயல் வரப்போகிறது. மூன்று பேர் பக்கத்து ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கையில் குடை. இன்னொருவரிடம் மழைக்கோட்டு. மூன்றாமவரிடம் பாதுகாப்புக்கு எதுவுமில்லை.

புயல் அடிக்கிறது. முதல் ஆள் குடையை விரிக்கிறார். நடக்கிறார். இரண்டாமவர் மழைக்கோட்டை அணிந்துகொண்டு போகிறார். மூன்றாமவர் ஒரு கட்டடத்தில் ஒதுங்கிக் காத்திருக்கிறார். புயல் ஓய்ந்தபின் புறப்படுகிறார். வழியில் குடைக்காரரும், மழைக்கோட்டுக்காரரும் கால் சறுக்கிக் கீழே விழுந்துகிடக்கிறார்கள். மூன்றாமவர் மட்டும் பக்கத்து ஊர் போய்ச் சேருகிறார்.

இதேபோல், பொருளாதாரம் சரியும்போது, எத்தனைதான் தயார்நிலையில் இருந்தாலும், அவசரமாகச் செயல்படக்கூடாது. பொறுமையோடு இருந்தால், நிச்சயம் இலக்குகளை எட்டலாம்.

ஜாக் மா. நீங்க படா கில்லாடிய்யா. நூடுல்ஸ் சிக்கலையும் எத்தினி க்ளீரா வெளங்க வெக்கிறீங்க?

ஆகவே, மகாஜனங்களே,

அமேசானா, அலிபாபாவா?

என் வோட்டு அலிபாபாவுக்குத்தான். உங்கள் வோட்டு?

முழுக் கதையையும் கேட்டுவிட்டு முடிவைச் சொல்லுங்கள்.

இதோ வருகிறார் ஜாக் மா.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்