அரூர் பகுதியில் மஞ்சள் பாலீஷ் மையங்களை ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் பகுதியில் தற்போது மஞ்சள் அறுவடை தொடங்கி யுள்ள நிலையில், அரூர் ஏல மையங்களுக்கு அதிக அளவில் வியாபாரிகளை வரவழைக்கவும், உத்தர வாத மான விலை கிடைக்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஞ்சள் பாலீஷ் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தீர்த்தமலை மற்றும் வாணியாறு, வள்ளிமதுரை அணைகளின் பாசனப் பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அரூர் பகுதியில் விளையும் மஞ்சள் சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. அரூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடத்தப் பட்டு வருகிறது.

இருந்த போதிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இங்கு விற்பனைக்கு வருகிறது. இம்மையங்களில் போதிய அளவில் வியாபாரிகள் வராததும், எதிர்பார்க்கும் விலை கிடைக்காததாலும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல் கின்றனர். இதனால் வாடகை, போக்குவரத்து செலவு, ஒரு நாள் காத்திருப்பு என விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கவும், உள்ளூர் விவசாயிகள் அரூர் ஏல மையங்களுக்கு மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரும் வகையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி மாதவன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது: அரூர் ஏல மையங்களுக்கு அதிக அளவில் வியாபாரிகளை வரவழைக்கவும், உத்தரவாத மான விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மஞ்சள் மூட்டைகளை பாதுகாக்க போதிய கூடங்கள், விவ சாயிகளுக்கான ஓய்வறை வசதிகள், தனியார் ஏஜெண்டுகள் வழங்குவது போல் மஞ்சள் மூட்டை பிடிக்க கோணிப்பைகள் வழங்குதல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் பாலீஷ் செய்யும் மையங்களை அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் வெளியூர் செல்லும் விவசாயிகளை தடுக்க முடியும். தற்போது மஞ்சள் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE