''அனைத்து நாடுகளுக்கும் வெற்றி...'' - இஎஃப்டிஏ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு (EFTA) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களுக்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நமது பொருளாதாரங்கள் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிச் சூழ்நிலைக்கு உறுதியளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிச்சர்லாந்து அடங்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடன் இந்தியா ஞாயிற்றுக்கிழமை ஒரு சுந்தந்திர வர்த்தக ஒப்பந்ததில் கையெழுத்திட்டது. டெல்லியில் நடந்த இந்தியா - இஎஃப்டிஏ இடையேயான வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் துணைத்தலைவராக இருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், "இஎஃப்டிஏ நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், ஒரு புதிய திருப்பம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தருணமாகும். இந்தியா மற்றும் இஎஃப்டிஏ-வுக்கு வர்த்தகம் மற்றும் பொருளாதார பங்களிப்பு ஒப்பந்த (டிஇபிஏ) பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நாடுகளுக்கிடையே இதுவரை முடிவடைந்திருக்கும் ஒப்பந்தங்களில் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முன்னோடியானது. இது நமது மக்களின் விருப்பங்களை மேம்படுத்தும் வகையில், இந்தியாவுக்கும் இஎஃப்டிஏவுக்கும் இடையே ஒரு வலுவான, உள்ளடங்கிய வளர்ச்சிக்கான உறுதியையும் பகிரப்பட்ட செழுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும் வலியுறுத்தும்.

பல அம்சங்களில் கட்டமைப்பு வேறுபாடுகள் இருந்த போதிலும், நமது பொருளாதாரங்கள் அனைத்து நாடுகளுக்குமான வெற்றிச் சூழ்நிலைக்கு உறுதியளிக்கும். மகத்தான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விட்டதன் மூலம் நாம் நம்பிக்கை மற்றும் லட்சியத்தின் புதிய நிலையை எட்டியுள்ளோம்.

இதன்மூலம் பரந்த அளவில் சீர்திருத்தங்கள் மூலமாக எளிமையான வர்த்தகத்தை நாம் அதிகரித்துள்ளோம். இது நமது நாடுகள் வர்த்தகம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய உச்சத்தைத் தொட உதவிபுரியும். இஎஃப்டிஏ நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கையும் தாண்டி இந்தியா தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும். நமது வளமான எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணத்தை இந்த ஒப்பந்தம் தொடங்கி வைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE