நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில் கோவை விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட ‘ஏஏஐ’ வெளியிட்ட டெண்டர்

By இல.ராஜகோபால்

ஏழு மாவட்ட மக்களின் விமான சேவையை பூர்த்தி செய்துவரும் கோவை விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010-ல் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த அப்போதைய திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த பணிகள் திமுக அரசு பொறுப்பேற்றபின் மீண்டும் வேகமெடுக்க தொடங்கின. தற்போது பெரும்பாலான நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒப்படைக்க அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளை ஏற்பது குறித்து விமான நிலைய ஆணையகம் பரிசீலித்து வருகிறது.

இச்சூழ்நிலையில், விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளநிலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு ‘ஏஏஐ’ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான பயணிகள் சிலர் கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் செய்தல், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். நிலங்கள் ஒப்படைக்கப்படும் என நம்பியிருந்த நிலையில், மீண்டும் திட்டம் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் சுற்றுச்சுவர் கட்ட ‘ஏஏஐ’ டெண்டர் வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறும்போது, “விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிலங்களை வழங்குவதில் தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்பது குறித்து விமான நிலைய ஆணையகத்தின் தலைமையகத்தில் இருந்து இறுதி முடிவு குறித்தஅறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பெரும்பாலான நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் நிலம்ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் சுற்றுச்சுவர் கட்ட தலைமையகம் சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே முன்பு இதே போன்ற டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. விரிவாக்க திட்டத்திற்கு நிலம் பெறுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE