சென்னை ஐஐடியில் தொடங்கியது 4 நாள் ‘தொழில்முனைவு உச்சி மாநாடு 2024’

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி-யின் தொழில் முனைவோர் பிரிவு (Entrepreneurship Cell) புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில், 9-வது வருடாந்திர ‘தொழில்முனைவோர் உச்சி மாநாட்டை’ இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடத்துகிறது. இளையோர் மாநாடு, கண்டுபிடிப்பாளர்களின் மாநாடு, வை-பிசினஸ் வழங்கும் ஸ்டார்ட்அப் மாநாடு, டிரைலீகல் வழங்கும் ஸ்டார்ட்அப் அத்தியாவசியங்கள் மாநாடு ஆகிய நான்கு மாநாடுகளைக் கொண்ட இந்த இ-உச்சிமாநாட்டில் 50-க்கும் அதிகமான சிறந்த பேச்சாளர்களின் உரைகளுடன் 50-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி-யின் ‘தொழில் முனைவு உச்சி மாநாடு 2024’-ல் இந்தியா முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனர்கள், 15,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 100 புத்தாக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களின் அதிநவீனத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் இலவச எக்ஸ்போவும் இ-உச்சி மாநாடு 2024-ல் இடம்பெறுகிறது. ஐஎஸ்ஓ, ஸ்டார்ட்அப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களைப் பெற்றுள்ள மாணவர்களால் நடத்தப்படும் இந்த தொழில்முனைவோர் சந்திப்பு இந்தியாவிலேயே முதன்முறையாகும். 1,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனர்கள், 50-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 15,000 மாணவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இன்று (7 மார்ச் 2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாட்டில் தொழில் முனைவை ஊக்கப்படுத்துவதில் இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு என்பது மிக முக்கியமான கட்டுமானத் தொகுதியாகும். இந்த உச்சிமாநாட்டின் மூலம் பல இளம் தொழில்முனைவோர், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் அரசாங்கத்தை ஒன்றிணைத்து தொழில்நுட்ப வல்லரசான இந்தியாவை நோக்கி அணிவகுத்துச் செல்ல சென்னை ஐஐடி விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.

இ-உச்சி மாநாடு-2024ல் அனைவரும் இலவசமாகப் பார்வையிடும் வகையில் ‘ஸ்டார்ட்அப் எக்ஸ்போ’வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கண்காட்சி நிகழ்வில் 100 புத்தாக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களின் அதிநவீனத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, இதில் பங்கேற்கும் 15,000 பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கின்றன.

நடப்பாண்டு இ-உச்சி மாநாடு பற்றிப் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என் கும்மடி, “தொழில்முனைவு செல் என்பது தொழில் முனைவோர் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், வளர்ந்துவரும் தொழில்முனைவோரிடையே நெட்வொர்க்கை ஊக்குவிக்கவும் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியாகும். தொழில்முனைவுப் பிரிவு நடத்தும் பிரமாண்ட நிகழ்வாக இ-உச்சி மாநாடு விளங்குகிறது. எண்ணற்ற மாணவர்களும், தொழில்முனைவோரும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடவும், நேரில் தொடர்பு கொள்ளவும் வசதியான ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கவே 9-வது உச்சி மாநாட்டை நேரடி நிகழ்வாக நடத்த திட்டமிட்டது” எனத் தெரிவித்தார்.

வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற அமெரிக்காவின் சான் மேடியோவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனம், ஐஐடி மெட்ராஸின் 1990 பேட்ச் முன்னாள் மாணவர்கள், ஸ்டேட் வங்கி ஸ்டார்ட்அப் கிளை, சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா, உலகின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் ஆகியோர் இந்நிகழ்வுக்கு தங்கள் நல்லாதரவை வழங்கியுள்ளனர்.

இ-உச்சி மாநாட்டின் நடப்பாண்டு நிகழ்வுகள் குறித்து சென்னை ஐஐடி இ-பிரிவு ஆசிரிய-ஆலோசகர் டாக்டர் ரிச்சா அகர்வால் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று புதிய தொழில்நுட்பங்கள், வணிக மாதிரிகள் மூலம் பாரம்பரியத் தொழிற்சாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்தியாவில் ஒட்டுமொத்த மாற்றங்களுக்கு இவை பங்களிப்பை வழங்கியுள்ளன. நமது இளம் தொழில்முனைவோர் நீண்டகால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய வாய்ப்புகளை கண்டறிவதால் உண்மையான முன்னுதாரண மாற்றத்தை காண முடிகிறது. இந்த உச்சி மாநாடு வளரும் தொழில்முனைவோருக்கு வெளியுலக சவால்களுக்கான புதுமைத் தீர்வுகளை வெளிப்படுத்தவும், கூட்டு முயற்சிகள், வழிகாட்டுத் தளங்கள், நிதி வாய்ப்புகளை நாடுவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்” என்றார்.

உச்சி மாநாட்டில் பங்கேற்பதன் நன்மைகளைப் பற்றியும், கல்வியை மையப்படுத்தி நடைபெறும் இந்நிகழ்வு பற்றி பேசிய ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவுப் பிரிவின் மாணவர் தலைவர் சோஹம் சாவ்டே கூறும்போது, “இ-உச்சிமாநாட்டில் பங்கேற்க 15,000 மாணவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த பங்கேற்பாளர்கள் தங்கள் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள், சுவாரஸ்யமான போட்டிகள் ஆகியவற்றின் மூலம் மதிப்புவாய்ந்த தொழில்முனைவுத் திறனைப் பெறுவதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதன் சிறப்பம்சங்கள் பற்றி மேலும் விவரித்த ஐஐடி மெட்ராஸ் இ-பிரிவின் மாணவர் தலைவர் திரு. சுஷாந்த் ஷெனாய் கூறும்போது, “நடப்பாண்டு இ-உச்சி மாநாட்டில் தொழில்நுட்ப நிறுவனர்களுக்கு உதவும் நோக்கில் நிதி, சட்டம், வரி சவால்கள் போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்ற நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் அமைந்துள்ளன. இவ்வாறான முக்கிய பகுதிகள் பெரும்பாலும் தங்களுக்குத் தகுதியானதை விட குறைவான கவனத்தைப் பெறுகின்றன என்பதை உணர்ந்து, இ-உச்சி மாநாட்டில் ஸ்டார்ட்அப்கள் செழிக்கத் தேவையான திறன் மற்றும் வளங்களை வழங்குவதில் வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

மதிப்புமிக்க பான்இந்தியா நிதி திரட்டும் போட்டி 7-வது ஆண்டாக இ-உச்சிமாநாடு 2024-ல் இடம்பெறுகிறது. ‘எலிவேட்’ என்ற இந்தப் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு தளங்களில் பங்கேற்கின்றன. பிரபலமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டைடன் கேபிடல், ஸ்பெஷல் இன்வெஸ்ட், ஜிவிஎஃப்எல், 100எக்ஸ் போன்ற 35க்கும் அதிகமான வென்சர் கேபிடல் நிறுவனங்களையும் எலிவேட் ஒருங்கிணைக்கிறது.

‘பூட்கேம்ப்’ எனப்படும் ஸ்டார்ட்அப் அக்சலரேட்டர் ஒன்பதாவது ஆண்டாக இ-உச்சி மாநாட்டில் இடம்பெறுகிறது. இந்நிகழ்வின்போது, ஃபின்டெக், எமர்ஜிங் டெக்னாலஜிஸ், ஜியோக்ரபிக்கல் டெக்னாலஜிஸ், செக்டர் அக்னோஸ்டிக் என நான்கு டிராக்குகளில் 500 ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கின்றன. ஆதித்ய பிர்லா வென்சர்ஸ், சிட்பி (SIDBI) போன்ற கூட்டு நிறுவனங்களும், தேசிய தொழில் ஊக்குவிப்பு நிறுவனங்களான என்எஸ்சிஇஎல், தேஷ்பாண்டே ஸ்டார்ட்அப்ஸ் அண்ட் ஃபவுண்டர்ஷிப் ஆகியவையும் இதற்கு ஆதரவை வழங்கி வருகின்றன.

மாநாட்டின் மையக் கருப்பொருளுடன் இணைந்து தங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் தொடர்ச்சியாக விரிவுரைகள், சிறப்பு வகுப்புகள் போன்றவையும் இ-உச்சி மாநாடு’24-ல் இடம்பெறுகின்றன.

இ-உச்சிமாநாடு தொடர்பான மேலும் விவரங்கள் பின்வரும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. https://esummitiitm.org/. இ-உச்சிமாநாடுக்கான அனுமதிச் சீட்டுகளைப் பெறுவதற்கான இணையதளம்- https://passes.esummitiitm.org/. இ-உச்சி மாநாடு 2024 தொடர்பான மேல்விவரங்கள் பின்வரும் சமூகவலைதளங்கள் மூலமும் அவ்வப்போது பதிவிடப்படும். Instagram / Twitter / Facebook / LinkedIn / YouTube.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்