புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000+ புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்திருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்குகளால் இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) புதிய உச்சம் தொட்டன.

பகல் 1.10 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,063.08 புள்ளிகள் வரை உயர்ந்து 73,563.38 என புதிய உச்சம் தொட்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 316.60 புள்ளிகள் உயர்வடைந்து 22,299.40 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில், டாடா ஸ்டீல், மஹேந்திரா அண்ட் மஹேந்திரா மற்றும் ஜெஎஸ்டபில்யூ பங்குகள் சுமார் 2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தன. டாடா மோட்டார்ஸ், மாருதி, எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகளும் லாபம் ஈட்டியிருந்தன. மறுபுறம் சன்பார்மா பங்குகள் 0.8 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தன.

ஏற்றத்தைத் தூண்டிய காரணிகள்: சந்தைகளின் எதிர்பார்ப்புகளையும் மீறி அக்டோர் - டிசம்பர் மாதத்துக்கான மூன்றாவது காலண்டில் (க்யூ3) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக உயர்ந்திருந்து. முன்னதாக 6.5 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே தேசிய புள்ளியல் அலுவலகம் (என்எஸ்ஓ) 2024-ம் நிதியாண்டுக்கான (FY24) நாட்டின் வருடாந்திர அசல் ஜிடிபி வளர்ச்சியை முந்தைய மதிப்பீடான 7.3 சதவீதத்தில் இருந்து 7.6 ஆக உயர்த்தியுள்ளது.

நேற்று பங்குச் சந்தை நிறைவடைந்த பின்னர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான அறிக்கை வெளியானது. இது இந்தியாவின் வளரும் பொருளாதாரத்தின் வலிமையில் புதிய முதலீடுகளுக்கு வழிவகுத்தது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என்ற நம்பிக்கையும் சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. அமெரிக்க மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே இரவில் அமெரிக்காவின் பணவீக்கம் அதன் உச்சத்தில் இருந்து குறைந்துள்ளதால், மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை கோடையில் இருந்து குறைக்கத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கப் பங்குச்சந்தைகளின் ஏற்றம் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளிலும் சாதகமான போக்குகள் நிலவியது. ஜப்பானின் நிக்கேய் அதன் வர்த்தக நேரத்தில் 2 சதவீதம் உயர்ந்து 39,900 என்ற உச்சத்தை எட்டியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE