ஏற்றுமதி பணி ஆணைகள் அதிகரிப்பு - நிலையான வளர்ச்சி பாதையில் வார்ப்படம், பம்ப்செட் தொழில்

By இல.ராஜகோபால்

கோவை: தொழில் நகரான கோவை வார்ப்படம், பம்ப்செட் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு தொழில் துறையும் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டன. மூலப்பொருட்கள் விலை உயர்வு, போதிய பணி ஆணைகள் கிடைக்கப்பெறாதது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக விளங்கின.

இந்நிலையில், சமீப காலமாக மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதாலும், நிலையாக உள்ளதாலும் தொழில் நிறுவனங்களில் நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வார்ப்பட தேசிய தொழில் அமைப்பின் ( ஐஐஎப் ) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: பொதுவாக தொழில் துறை வளர்ச்சியை கணக்கிடும் கருவியாக வார்ப்பட தொழில் திகழ்கிறது. பெரும்பாலான பொருட்கள் உற்பத்திக்கு வார்ப்படம் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம். வார்ப்பட தொழில் வளர்ச்சி பெற்றால் ஒட்டுமொத்த தொழில் துறையும் வளர்ச்சியை பதிவு செய்யும்.

தற்போது கார், மோட்டார் பம்ப்செட் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பொறியியல் பொருட்களான ஏர் கம்ப்ரசர் உள்ளிட்டவற்றின் தேவை தொடர்ந்து நிலையாக உள்ளது. டிராக்டர் வாகனங்கள் விற்பனை மட்டும் சற்று மந்தமாக உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல் மூலப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் வார்ப்பட தொழில்துறை நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது, என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ( சீமா ) தலைவர் விக்னேஷ் கூறும் போது, “வீட்டு தேவைக்கான மோட்டார் பம்ப்செட் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைகாலம் தொடங்கியுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மேலும் தேவை அதிகரிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூலப் பொருட்கள் விலை உயர்வு, போக்கு வரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவில் பம்ப்செட் உற்பத்தி தொழில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இதனால் தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை பம்ப்செட் நிறுவனங்களின் பங்களிப்பு 45 சதவீதமாக குறைந்தது. தற்போது நிலையான வளர்ச்சி பதிவு செய்து வருவதால் மீண்டும் தேசிய பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE