பழநியில் மாம்பூக்களை தாக்கும் தேன் பூச்சி: விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பகுதியில் மாம்பூக்களை தேன் பூச்சிகள் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மா மரங்கள் பூக்கும் தருணங்களில் இதமான காற்று தேவைப்படும். இதன் மூலம் பூச்சித் தாக்குதல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும் என்பதால் பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிக ளிலும், நத்தம், சாணார்பட்டியிலும் அதிக அளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மா மரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன.

பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால்தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும் என்பதால் இதற்காக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், தேன் பூச்சிகள் தாக்குதலால் மாம்பூக்கள் கருகி வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மா சீசன் தொடங்க உள்ள நிலையில் மாமரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. எனினும், தேன் பூச்சிகள் தாக்குதலால் பூக்கள் கருகி உதிர்ந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேன் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருமுறை மருந்து தெளிக்க ரூ.7,000 வரை செலவாகிறது. எனவே, தேன் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக் கலைத் துறையினர் தோட்டங்களில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE