கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்: மார்ச் 11 முதல் அமல்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

பெங்களூருவில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.பயணிகள் சிரமப்படுவதால், ரயில் இயக்க நேரத்தை மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, ரயில் இயக்கப்படும் நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே அறிவித்தது. வரும் மார்ச் 11-ம் தேதி முதல் இந்த நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்டி எண் 20642 / 20641 கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, திருப்பூருக்கு 8.03 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.42 மணிக்கும், சேலத்துக்கு 9.32 மணிக்கும், தருமபுரிக்கு 10.51 மணிக்கும், ஓசூருக்கு 12.03 மணிக்கும், பெங்களூருக்கு மதியம் 1.50 மணிக்கும் சென்றடையும்.

பெங்களூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, ஓசூருக்கு 3.10 மணிக்கும், தருமபுரிக்கு 4.22 மணிக்கும், சேலத்துக்கு 5.57 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கும், திருப்பூருக்கு 7.31 மணிக்கும், கோவைக்கு இரவு 8.45 மணிக்கும் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நேரத்தை மாற்றி இயக்குவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், பயண நேரத்தை 6.30 மணி நேரத்தில் இருந்து 5.50 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE