மதுரை: “நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு சிறு, குறு தொழிற்சாலைகள் இன்றியமையாதது” என மதுரை தொழில்முனைவோர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மதுரை டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் சிறு, குறு தொழில்முனைவோர் (ஆட்டோமேட்டிவ் பிரிவு) மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியது: "சிறு, குறு தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இக்கள்) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழில், பொருளாதாரத்தின் ஒரு சக்தியாக உள்ளது.
உலகளாவிய எம்எஸ்எம்இ சங்கிலியில் இந்தியா வலுவான இடத்தை பெற்றுள்ளது. கரோனா காலத்தில் இந்திய எம்எஸ்எம்இ-க்களின் திறன் முக்கியமானது. எம்எஸ்எம்இயின் எதிர்காலத்தை நாட்டின் எதிர்காலமாக பார்க்கிறோம். கரோனா காலத்தில் லட்சக்கணக்கானோரின் வேலைகளை காப்பாற்றியது எம்எஸ்எம்இக்கள் தான்.
ஒவ்வொரு துறைகளிலும் எம்எஸ்எம்இ-க்களுக்கு குறைந்த விலையில் கடன்கள், செயல்பாட்டு மூலதனத்துக்கான வசதிகள் அளிக்கப்படுகிறது. நாட்டின் சிறு தொழில் நிறுவனங்களின் தரத்தை உயர்த்த அரசு வலியுறுத்தி வருகிறது. எம்எஸ்எம்இ-க்களின் புதிய தொழில்நுட்பம் மற்றும் திறன்களின் தேவையை அரசு கவனித்து வருகிறது.
எதிர்காலத்தை வடிவமைப்பதில் திறன் மேம்பாட்டின் பங்கு முக்கியமானது. திறன் மேம்பாடு திட்டங்களுக்கு பல்வேறு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில்தான் எம்எஸ்எம்இ-க்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகங்கள் தேவை. மின்சார வாகனங்களின் (இவி) வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்முனைவோர்கள் தங்களின் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கூடுதல் வருவாயை வழங்கும் சூரிய ஒளி மின் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி வீடுகள் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தால் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்களும் அமையும். ஹைட்ரஜன் வாகனங்களை ஊக்குவிக்கும் ஆட்டோ மற்றும் வாகன உதிரிபாகங்களுக்காக ரூ.26,000 கோடி பிஎல்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
நாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் வளரும்போது, அந்தத் தொழில்நுட்பங்களில் உலகளாவிய முதலீடு இந்தியாவுக்கும் வரும். தொழில்முனைவோர் தங்கள் திறனை விரிவுபடுத்தவும், புதிய பகுதிகளை ஆராயவும் வேண்டும். வாய்ப்புகள் வரும்போது சவால்களும் இருக்கும். டிஜிட்டல் மயமாக்கல், மின்மயமாக்கல், மாற்று எரிபொருள் வாகனங்கள் மற்றும் சந்தை தேவை, ஏற்ற இறக்கம் ஆகிய பிரச்சினைகளும் உள்ளன. இவற்றை வாய்ப்புகளாக மாற்ற சரியான உத்தியுடன் செயல்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் லெட்சுமி பள்ளி வளாகத்தில் வந்திறங்கினார். அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். விழா நடந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தொழில் கண்காட்சியை பார்வையிட்டார்.
காந்தி கிராம இயற்கை தானிய உணவு காண்காட்சியை பார்வையிட்டார். தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் பிரதமர் பேசினார். பிரதமருக்கு மாணவிகள் அவரது உருவ ஓவியத்தை பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார். பாஜக தலைவர் அண்ணாமலை, டிவிஎஸ் நிறுவன நிர்வாகிகள் ஷோபனா, தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவை வல்லரசாக்குவதே பிரதமர் மோடியின் லட்சியம்: மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, "இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பிரதமர் மோடி பணிபுரிந்து வருகிறார். அதற்காக நாட்டின் கட்டமைப்பு வசதியை அதிவேகமாக எடுத்துச் சென்று வருகிறார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக முன்னேற்றத்தை கண்டுவருகிறது. கட்டமைப்பு வசதியில் அதிவேகமாக வளர்ந்து வருகிறோம். இந்தியாவை 2047-ல் வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம். அதற்காக பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. தமிழ் மொழியை காத்த பெருமை பிரதமரை சேரும். செல்லும் இடமெல்லாம் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை பரப்பி வருகிறார். தமிழகத்தின் செங்கோலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நிறுவினார். திருக்குறளை 35 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்துள்ளார்” என்று அவர் பேசினார்.
- கி.மகாராஜன்/ என்.சன்னாசி
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago