அமெரிக்காவின் என்விடியா நிறுவன பங்குகள் ஒரே நாளில் ரூ.23 லட்சம் கோடி அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: கனிணி தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த என்விடியா பங்குகளின் மதிப்பு அமெரிக்க சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது 16 சதவீதம் அதிகரித்தது. அதாவது ஒரு பங்கின் விலை 785.38 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 277 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாகும். இது, அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. என்விடியா நிறுவனத்தின் ஒரு நாள் சந்தை மதிப்பு அதிகரிப்பு என் பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்புக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 லட்சம் கோடி: அதாவது இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில், ஒரே நாளில் என்விடியாவின் சந்தை மதிப்பு என்பது அதை விட அதிகமாகவே (ரூ.23 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரே நாள் வர்த்தகத்தில் விஞ்சியுள்ளது பங்குச் சந்தை சார்ந்த நிபுணர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது.

3-வது பெரிய நிறுவனம்: இந்த ஒரு நாள் கணிசமான அதிகரிப்பையடுத்து தொழில்நுட்ப துறையில் என்விடியா நிறுவனம் 1.89 டிரில்லியன் டாலருடன் மூன்றாவது மிகப்பெரிய அமெரிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்கு, முன்னதாக, மைக்ரோசாஃப்ட் (3.06 டிரில்லியன் டாலர்), ஆப்பிள் (2.85 டிரில்லியன் டாலர்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE