சொன்னா கேட்க மாட்டியா?’ ‘அவன பாரு, சொன்ன பேச்ச கேட்டு எவ்வளவு சமர்த்தா இருக்கான்.’ சின்ன வயதில் இதை எத்தனை முறைக் கேட்டிருப்போம் பெற்றோர்களிடமும் டீச்சர்களிடமும். அப்பொழுதுதான் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அட்லீஸ்ட், பிசினஸ் செய்யும் இப்பொழுதாவது பெரியவர்கள் சொன்னதை கேட்டுத் தொலைப்போமே. நமக்கும் நம் தொழிலுக்கும் புண்ணியமாகப் போகும்.
வெற்றி பெறும் வழி
மார்க்கெட்டிங் விற்பன்னர்கள் பிசினசில் வெற்றி பெறும் வழிகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் காது கொடுத்து கேட்டவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். அதை சட்டை செய்யாதவர்கள் தாங்கள் போட்டிருக்கும் சட்டையையே இழந்திருக்கிறார்கள்.
நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு போன விற்பன்னர்களில் ஒருவர் தியோடர் லெவிட். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உலகப்புகழ் பெற்ற நிர்வாகவியல் ஜர்னலான ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’வின் ஆசிரியராகவும் இருந்தவர்.
1960-ல் இவர் எழுதிய ‘மார்க்கெட்டிங் மயோப்பியா’ என்கிற அருமையான கட்டுரையில் மார்க்கெட்டர்களை ஒரு கேள்வி கேட்டார். கேட்டார் என்பதை விட மார்க்கெட்டர்கள் தங்களைத் தானே கேட்டுக்கொள்ளச் சொன்னார்.
‘நான் யார். நான் எந்த தொழிலில் இருக்கிறேன்?’
சாதாரண கேள்வி போல் தோன்றினாலும் இதற்கான தெளிவான, திட்டமிட்ட பதில்தான் உங்கள் தொழிலின் அஸ்திவாரம்.
இந்தக் கேள்விக்கான சரியான விடையை அறியாமல்தான் பல பிசினஸ்கள் படுகுழியில் விழுந்துவிட்டன. இந்தக் கேள்விக்கான பதிலை திறம்பட சிந்தித்து திறமையாய் பிசினஸை அமைத்துக் கொண்ட தொழில்கள் செழித்திருக்கின்றன. கொழித்துவருகின்றன. ’மார்க்கெட்டிங் மயோப்பியா’ என்பதற்கு ‘குறுகிய நோக்குடன் பார்க்கப்படும் மார்க்கெட்டிங்’ என்று அர்த்தம். தொழில் என்பது நாம் தயாரிக்கும் பொருட்களை கொண்டு வரையறுக்காமல் நம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முறையைக் கொண்டு வரையறுக்கவேண்டும் என்கிறார் லெவிட். ஏனெனில் தேவைகள் நிரந்தரமானவை. பொருட்கள் மாறி வரும் தன்மை கொணடவை.
அதனால்தான் நாம் செய்யும் பிசினஸையோ ஈடுபடும் தொழிலையோ பொருளைக் கொண்டு விளக்குவதைக் காட்டிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கொண்டு, நாம் அளிக்கும் பயன்களைக் கொண்டு விளக்குவது பயன் தரும் என்கிறார் லெவிட். லெவிட் கூறியதை முழுமையாய் புரிந்து கொள்ள, அவர் சொன்னதை கேட்காமல் பட்டுக்கொண்டர்வர்களைப் பார்க்க முதலில் நாம் போகப்போவது சிவகாசிக்கு. சந்திக்கப்போவது தீப்பெட்டித் தயாரிப்பாளர்களை.
சமீப காலமாகவே தீப்பெட்டி தொழிலின் வளர்ச்சி தளர்ந்திருக்கிறது. அதன் விற்பனை ஒரு வித தேக்க நிலையை அடைந்திருக்கிறது. ஏனெனில், வத்திப் பெட்டிகளின் உபயோகம் குறைந்து வருகிறது. வத்திப்பெட்டிகள் தரும் பயனை கொடுக்க வேறு பல பொருட்கள் வந்துவிட்டதால்!
சிகரெட் பிடிக்கும் பழக்கம் முன்னதுக்கு குறைந்திருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்களில் பலரும் லைட்டரை உபயோகிக்கத் துவங்கிவிட்டனர். அதேபோல் சமீப காலமாக பெண்மணிகள் அடுப்பேற்ற காஸ் லைட்டரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது பத்தாதென்று இண்டக்ஷன் ஸ்ட்வ்களை உபயோகிக்க துவங்கியிருக்கின்றனர். சரி, ஆண்டவனுக்கு விளக்கேற்ற வத்திப்பெட்டியை எடுக்கலாம் என்றால் அங்கும் வந்துவிட்டது வில்லங்கம். அகல் விளக்கு போலவே அழகாய் கரண்டில் எரியும் எலக்ட்ரிக் விளக்குகள் வந்துவிட்டன.
போய் தொலையட்டும், குறைந்தது கரண்ட் போகும் போதாவது மெழுவர்த்தியை ஏற்ற வத்திப்பெட்டியை எடுப்போம் என்றால் அங்கும் வந்துவிட்டது எமர்ஜென்சி லாம்ப்புகளும் ஜெனரேட்டர், இன்வர்ட்டர் போன்ற இன்ன பிறவும்.
விற்பனை சரிவு
வத்திப்பெட்டி கொடுக்கும் அதே பயனைக் கொடுக்க மற்ற பொருட்கள் வந்துவிட்டதால்தான் வத்திப்பெட்டி விற்பனை குறைந்து வருகிறது. மாறி வரும் சூழ்நிலைகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும்தான் இதற்குக் காரணம், பாவம், வத்திப்பெட்டி தயாரிப்பாளர்கள் இதற்கு என்ன செய்திருக்கமுடியும் என்று அவர்களைப் போலவே நீங்களும் நினைத்தால் உங்களுக்கு லெவிட் சொன்னதை விலாவாரியாய் பற்ற வைக்கவேண்டியது அவசியமாகிறது.
வத்திப்பெட்டி தயாரிப்பாளர்கள் தாங்கள் எந்த தொழிலில் இருக்கிறோம் என்பதைச் சரியாக வரையறுக்கத் தவறினார்கள். தங்களை ‘வத்திப்பெட்டி தயாரிக்கும் தொழிலில்’ இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். அவர்கள் வத்திப்பெட்டி தொழிலில் இல்லை.
அவர்கள் இருந்தது ‘தீபம் ஏற்றும் தொழிலில்’! அப்படி நினைத்திருந்தால் பற்ற வைக்க புதிய விஷயங்களை, முயற்சிகளை, பொருட்களை மற்றவர்களுக்கு முன் அவர்களே கண்டுபிடித்திருப்பார்கள். அட்லீஸ்ட் அதைத் தயாரித்து, விற்கவாவது முயன்றிருப்பார்கள். சிகரெட் லைட்டரை, காஸ் லைட்டரை, எலக்ட்ரிக் விளக்குகளை, எமர்ஜென்சி லாம்புகளை இவர்களே அறிமுகப்படுத்தியிருப்பார்கள். இப்படிச் செய்திருந்தால் வத்திப்பெட்டி விற்பனை குறைந்தாலும் இவர்களுக்கு அந்தப் புதிய தொழில்கள் கைகொடுத்திருக்கும்.
ஏன் செய்யவில்லை? ஏனெனில் லெவிட் சொன்னதை இவர்கள் செய்யவில்லை. ‘நான் யார்? நான் எந்த தொழிலில் இருக்கிறேன்’ என்பதை சரிவர அறுதியிடத் தவறினார்கள். அதனாலேயே தேக்க நிலையில் தவழ்கிறார்கள்! அடுத்து, லெவிட் சொன்னதை செவி கொடுத்து கேட்டு அதை சிரமேற்கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்று வரும் ப்ராண்டை பார்க்க, சிவகாசியிலிருந்து நாம் செல்லப்போவது சினிமா தியேட்டருக்கு! சென்னையிலுள்ள ‘சத்யம் மல்டிப்ளெக்ஸ்ஸுக்கு’.
ஊரெங்கும் சினிமா தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டு ஃப்ளாட்டுகளாகவும், கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களாகவும் மாறி வரும் இந்தக் காலத்தில் சத்யம் மட்டும் சக்கைப்போடு போட்டு சக்ஸஸ்ஃபுல்லாக விளங்கி வருகிறது. எப்படி?
மற்றவர்கள் தங்களை ’தியேட்டர் பிசினஸில்’ இருப்பதாக நினைத்தார்கள். அதனாலேயே 24 மணி நேர டீவி, ஹோம் தியேட்டர், டீவீடி, அம்யூஸ்மெண்ட் பார்க் போன்றவை வந்தவுடன் அதன் போட்டி தாளாமல் இழுத்து மூட திண்டுக்கல்லுக்கு பூட்டு வாங்க புறப்பட்டுப் போனார்கள். நாம் இருப்பது தியேட்டர் தொழிலில் அல்ல. நாம் வாடிக்கையாளரை மகிழ்விக்கும் தொழிலில் இருக்கிறோம்’ என்பதை உணர்ந்தது சத்யம் மட்டுமே.
அதனாலயே டிக்கெட் வாங்குவதிலிருந்து படம் பார்த்து வெளியேறும் வரை வாடிக்கையாளர்களை முழுமையாய் மகிழ்விக்க என்னென்ன செய்யவேண்டும் என்று ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் பிசினஸை வடிவமைத்துகொண்டது சத்யம். ஒரே வளாகத்தில் பல தியேட்டரகள், அதில் பல மொழிப் படங்கள், இண்டெர்னட் டிக்கெட் புக்கிங், சௌகரியமான சீட் அமைப்பு,
ஜோரான ரெஸ்டாரண்ட், விஸ்தாரமான பார்க்கிங் என்று வாடிக்கையாளர்களை மகிழ்விக்க என்னெவெல்லாம் தேவையோ அதைவிட ஒரு படி அதிகமாகவே அளிக்கும் வகையில் தங்களை அழகாக மாற்றிக் கொண்டார்கள்.அதனால்தான் வாடிக்கையாளர்கள் படத்திற்கு படம், சாப்பாட்டிற்கு சாப்பாடு, ஜாலிக்கு ஜாலி என்று குடும்ப சமேதராய், நண்பர்கள் புடைசூழ சத்யத்திற்கு நேர்த்திக் கடன் பட்டது போல் மாசத்திற்கு ஒரு முறை திக்விஜயம் செய்து வருகின்றனர்.
ஒரு புறம் வத்திப்பெட்டிகள் நமுத்து போய்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சத்யம் சக்கை போடு போடுவதன் ரகசியம் புரிகிறதா? செவிட்டில் அடித்தது போல் லெவிட் கேட்ட கேள்வியை நீங்கள் உங்கள் மனதில் ரிவிட் அடித்து அதன்படி தொழிலை அறுதியிடுங்கள். அப்படி செய்தால் சத்தியமாய் வெற்றிதான். சத்யம் போன்ற வெற்றிதான்!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago