மா சிறப்பு திட்டத்துக்கு ரூ.27.48 கோடி: கிருஷ்ணகிரி விவசாயிகள் வரவேற்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.48 கோடி மற்றும் தென்னை வளர்ச்சிக்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தர ராஜன் கூறியதாவது: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் மா சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த பட்ஜெட்டில் மா விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது, கவாத்து பயிற்சி, 26 ஆயிரத்து 540 ஏக்கர் பரப்பில் பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம், 4,380 ஏக்கரில் உள்ளூர் மா ரகங்கள் மற்றும் 250 ஏக்கரில் ஏற்றுமதிக்கு ஏற்ற மா ரகங்கள் உற்பத்தி செய்ய புதிய மாந்தோட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த திட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டராக இருந்த மாந் தோட்டங்கள் தற்போது 35 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மேலும், வறட்சி, பூச்சித் தாக்குதல், இயற்கை பேரிடரால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாம்பழத்துக்கு உரிய விலை நிர்ணயம் செய்தல், அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை, மா கொள்முதல் நிலையம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தால் மா விவசாயிகள்கூடுதல் பயனாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி கூறியதாவது: வேளாண் பட்ஜெட்டில் தென்னை வளர்ச்சிக்காக ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தென்னை விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தென்னை விவசாயத்தில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், போச்சம்பள்ளியை மையமாக வைத்து ஒருங்கிணைந்த தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி மையம் தொடங்க வேண்டும்.

மேலும், இங்கு தென்னையிலிருந்து நார், தேங்காய் எண்ணெய், வெர்ஜின் ஆயில், பவுடர், நீரா பானம், தென்னை சர்க்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம். இதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைக்கும். 25 லட்சம் தென்னை விவசாயிகள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE