சூதாட்ட செயலி புரோமோஷனில் விராட் கோலி: இது டீப்ஃபேக் அட்டகாசம்!

By செய்திப்பிரிவு

சென்னை: சூதாட்ட செயலி ஒன்றில் அதிக வருமானம் ஈட்டலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேசுவது போன்ற புரோமோஷனல் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. ஆதாயம் ஈட்டும் நோக்கில் மோசடியாளர்கள் டீப்ஃபேக் நுட்பத்தினை இதற்காக பயன்படுத்தி உள்ளனர் என நம்பப்படுகிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் சாதகமும், பாதகமும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அதன் மூலம் உருவாக்கப்படும் போலியான கன்டென்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் டீப்ஃபேக் கன்டென்ட் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமயங்களில் இது குறித்து தங்களது ஆதங்கத்தையும் பிரபலங்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் முறைப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சூதாட்ட செயலியை விராட் கோலி புரோமோட் செய்வது போன்ற வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதள பயனர்களிடத்தில் நம்பகத்தன்மையை பெற வேண்டுமென்ற காரணத்துக்காக தொலைக்காட்சி செய்தி வடிவில் இதனை உருவாக்கி உள்ளனர். அதில் ரூ.1000 முதலீடு செய்த கோலி, மூன்றே நாட்களில் ரூ.81,000 ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு நிற்காமல் இந்த வீடியோவில் கோலியின் பழைய வீடியோவவை லிப்-சின்க் செய்து, ஏஐ மூலம் அவரது குரலை பிரதி எடுத்து பயன்படுத்தி உள்ளனர். இது இணையவெளியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு கடந்த 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE