டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: காய்கறி விலை உயரும் அபாயம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் உள்ளதாக காஜிபூர் மொத்த விற்பனை சந்தையின் வியாபாரி ஒருவர் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும்படி மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ‘டெல்லிக்கு செல்வோம்’ எனும் போராட்டத்தை சம்யுக்தகிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் அறிவித்தன.

இதையொட்டி பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கிபுறப்பட்டனர். இவர்கள் பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் உள்ள ஷம்புவில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று 5–வது நாளை எட்டியது.

இந்நிலையில் டெல்லி காஜிபூர் மொத்த விற்பனை காய்கறி சந்தையின் வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 15 நாட்களில் கேரட் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் விநியோக சங்கலி தடைபட்டுள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதால் அரசு - விவசாயிகளுக்கு இடையிலான பிரச்சினை விரைவில் முடிவுக்கு வருவது அவசியம்” என்றார்.

மற்றொரு வியாபாரி கூறும்போது, “விவசாயிகளின் போராட்டம், காய்கறி விலையில் உடனடியாக எந்த தாக்கத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. போராட்டங்கள் தொடர்ந்தால் சாலை மறியல் அதிகமாகும். பிறகு உ.பி., கங்காநகர், புனே போன்ற இடங்களில் இருந்து காய்கறி வரத்து பாதிக்கப்படும். இதனால் காய்கறி விலை உயரக்கூடும்” என்றார்.

மத்திய அரசுடன் கடந்த வியாழக்கிழமை விவசாயிகள் நடத்திய 3-வது சுற்று பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் 4-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE