பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை விவகாரம்: மார்ச் 15 வரை கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

By செய்திப்பிரிவு

மும்பை: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு தேதியை வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. முன்னதாக, வரும் 29-ம் தேதி வரை இதற்கான கெடு விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை (பிப்.16) அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் வங்கி சேவை சார்ந்த செயல்பாட்டுக்கு கடந்த மாதம் தடை உத்தரவு பிறப்பித்தது ரிசர்வ் வங்கி. அதே நேரத்தில் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை முறையின் கீழ் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட், FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. இருந்தாலும் தங்கள் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு, ப்ரீபெய்ட் வாலட், FASTag போன்றவற்றில் உள்ள இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE