ஜிபிஎஸ் மூலமான சுங்கக் கட்டண வசூல் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தற்போது சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விரைவிலேயே ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் மூலமான சுங்க வசூல் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக நடை முறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்பு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தக் காத்திருப்பு நேரம்வெகுவாக குறைந்தது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் முறையில் வசூல் செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். ஜிபிஎஸ் மூலம், வாகனங்களின் பயண தூரம் கணக்கிடப்படும்.

2018-19 ஆண்டில் சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடமாக இருந்தது. பாஸ்டேக் அறிமுகத்துக்குப் பிறகு, காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. ஜிபிஎஸ் மூலமான வசூல் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளே இருக்காது.

தற்போது சுங்கக் கட்டண வசூல் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE