100 பில்லியன் டாலர் கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் இணைந்தார் கவுதம் அதானி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக சரிவை சந்தித்தது. துறைமுகம் முதல் எரிசக்தி வரை பரந்து விரிந்த அந்த குழுமத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலரை இழந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதானி நிறுவனத்துக்கு சாதகமாக கருத்து தெரிவித்த நிலையில் பெரும் சரிவிலிருந்து அந்த குழுமம் படிப்படியாக மீண்டது. நடப்பாண்டில் மட்டும் அதன் மதிப்பு 16 பில்லியன் டாலர் அளவுக்கு மீட்சி கண்டுள்ளது.

இதையடுத்து, 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் நுழைந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸின் தற்போதைய மதிப்பீட்டின்படி கவுதம் அதானி 101 பில்லியன் டாலர்நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர் வரிசையில் 12-வதுஇடத்தில் உள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு 130 சதவீதம் அதிகரிப்பைக் கண்டது.

கடந்த 2022-ல் அதானியின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதைவிட 50 பில்லியன் டாலர் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE