தொழில் ரகசியம்: பேக்கரிக்கு என்ன பெயர் வைக்கலாம்?

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

`ஹ

லோ’

‘சதீஷ் கிருஷ்ணமூர்த்திங்களா?

‘ஆமாங்க’.

`மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் சதீஷ் கிருஷ்ணமூர்த்திங்களா’.

‘அவரே தாங்க’.

‘இந்துல வாராவாரம் எழுதறாரே.’

‘நான்தாங்க’.

‘பிசினஸ் பத்தி புத்தகமெல்லாம் எழுதறாரே’.

‘ஐயா, நான் சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம், சென்னைவாசி. ஆறடி உயரம், ஓ பாசிடிவ் க்ரூப். என் ஆதார் நம்பர் வேணுங்களா?’.

‘வேணாங்க. நான் திருச்செங்கோடுலேருந்து பேசறேன். ரொம்ப நாளா உங்களோட பேசனும்னு இருந்தேன்’.

‘ரொம்ப நேரமாவே எங்கூட பேசிட்டு இருக்கீங்க’.

‘நான் இங்க ஒரு பேக்கரி திறக்கலான்னு இருக்கேன்.’

‘பேஷா திறங்க. அட்ரஸ் தாங்க. அந்தப் பக்கம் வந்தா கண்டிப்பா வரேன்’.

‘அதில்லீங்க’.

‘வரவேண்டாம்னு சொல்றீங்களா?’

‘இல்ல வாங்க. ஆனா நான் ஃபோன் பண்ணது அதுக்கில்லீங்க.’

‘சொன்னீங்கன்னா நானும் தெரிஞ்சுப் பேன்’.

‘என் பேக்கரிக்கு பெயர் வெக்கணுமுங்க. உங்ககிட்ட ஏதாவது பெயர் இருக்கா?’

‘சதீஷ் கிருஷ்ணமூர்த்தின்னு என் பேர் தான் இருக்கு. வேணுங்களா?’

`அத நீங்களே வச்சுக்குங்க. என் பேக்கரிக்கு ஒரு நல்ல பெயரா சொன்னீங்கன்னா…’

‘பிராண்ட் பெயர் உங்க பொருளையோ, அதோட தனித்தன்மையையோ குறிக்கணும். அப்பதான் அந்த பெயரே உங்க பிராண்டிற்கு ப்ளஸ் பாயிண்ட்டா இருக்கும்’.

‘அதான் பேக்கரின்னு சொன்னேனே’.

`சொன்னீங்க. நான் இல்லன்னு சொல்லல. உங்க பேக்கரி எப்படிப்பட்டது. மத்த பேக்கரிய விட எப்படி வித்தியாசப்படுது. அததான் பெயர் குறிக்கணும்னு சொல்றேன்.’

‘அப்படியா? என் பேக்கரில எல்லா ஐட்டங்களும் இருக்கும். அத சொல்லலாமுங்களா?’

‘மத்த பேக்கரில இல்லாத ஐட்டங்கள் உங்க கிட்ட இருக்குமா?’

‘இல்ல. மத்த எல்லார்டையும் இருக்கற ஐட்டங்கள் எங்கிட்டேயும் இருக்கும்’.

‘அப்ப, அது தனித்தன்மை ஆகாதே’.

`என் பேக்கரில ஐட்டமெல்லாம் சுத்தமா, சூப்பர் டேஸ்ட்டா இருக்கும்.’

‘பலே, மத்த பேக்கரிய விட எப்படி வித்தியாசமா இருக்கும்?’

‘அங்கெல்லாம் என்ன டேஸ்ட் இருக்கோ அதே மாதிரி தான் எங்கிட்டேயும் இருக்கும்’.

‘அப்ப அந்த ரூட்லயும் பேர் வக்கமுடியாதே’.

`ம்ம்ம்ம் போர்டு எழுதணும். எப்படியும் நாலஞ்சு நாள் ஆக்கிடுவாங்க. ஏதாவது நல்ல பெயரா சொன்னீங்கன்னா, இன்னைக்கே வேலைய ஆரம்பிச்சுடுவேன்’.

`பிராண்ட் பொசிஷனிங்கோட வெளிப்பாடுதான் பெயர். மக்களுக்கும் பிராண்டுக்கும் இருக்கற முதல் கான்டாக்ட்தான் பிராண்ட் பெயர். அத கேர்ஃபுல்லா வைக்கணும்.’

`அடுத்த வாரம் கடைய திறக்கலாம்னு இருக்கேன். நல்ல பெயர் கிடைக்காதுங்களா?’

‘ பிராண்டுக்கு நல்ல பேரு கெட்ட பேருன்னு ஏதும் கிடையாதுங்க. பொருத்தமான பெயரா இல்லையாங்கறது தான் முக்கியம்’.

‘அதான் பேருக்கு பின்னால் பேக்கரின்னு சேர்த்துடுவேன்னு சொன்னேனே’.

‘சேருங்க, வேண்டாம்னு சொல்லல. எந்த மாதிரி பேக்கரி, மத்தவங்கள விட எப்படி வித்தியாசப்படுதுங்கறத பெயர் பிரதிபலிச்சா பிராண்டுக்கு ஒரு பவர் வருமில்ல’.

‘ம்ம்ம்ம்’.

‘கால் வெடிப்புக்கு க்ராக்-ன்னு ஒரு பிராண்ட் இருக்கு. அது நல்ல பெயரா, கெட்ட பெயரான்னு தெரியாது. ஆனா அந்த பொருளுக்கு பொருத்தமான பெயர். அதே பெயர எடுத்து க்ராக் பேக்கரின்னு நீங்க வச்சா நல்லா இருக்குமா? அப்படி வச்சா எல்லாரும் உங்களை ஒரு மாதிரி பார்ப்பாங்க இல்ல’?

‘புரியுதுங்க. வேணும்னா என் குல தெய்வம் பேர வெக்கலாமுங்களா?

`உங்க குல தெய்வம் பேக்கரி சம்பந்தப்பட்ட பெயருங்களா?’

`இல்லீங்க. மேல்சின்னபள்ளியன்பாளையம் வீரமாமுனீஸ்வர வரவிக்கிரம விமலாதித்தனார். நல்லாருக்குங்களா’

`ரொம்ப நல்லா இருக்குங்க. அப்படியே எழுதினா கடை போர்டு திருச்செங்கோடு டவுன தாண்டி போகுமே, பரவாயில்லையா?’

`நம்மள்து சின்ன கடைங்க’.

‘சின்ன பெயரா இருந்தா உங்களுக்கு சௌகரியமா இருக்குமேன்னு பார்க்கறேன்’.

`அப்படியே கூட்டினா பதினாலு வரா மாதிரி பாருங்க’.

‘கழிச்சா எவ்வளவு வரணுங்க’?

‘நியூமராலஜிங்க. கடை பேர கூட்டி 14 வந்தா ஓஹோன்னு இருக்கும்னு என் குடும்ப ஜோசியர் சொன்னாரு’.

‘அவரையே கடைக்கு ஒரு நல்ல பெயரை சொல்லச் சொல்லிடுங்களேன். உங்களுக்கு ஒரு வேலை மிச்சம்’.

‘அவருக்கு மார்க்கெட்டிங் தெரியாதுங்களே’.

‘மார்க்கெட்டிங்கும் வேணும், ஜோசியமும் வேணும்னா கொஞ்சம் கஷ்டங்க’.

`நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு தான் உங்க கிட்ட வந்தேன். அர்ஜண்ட் சார்’.

‘பிராண்ட் பெயர் வக்கறது தத்கல்ல டிக் கெட் எடுக்கறா மாதிரின்னு நினைச்சீங்களா. ஆயுசுக்கும் இருக்கப் போற பேரு சார். அதுக்குண்டான மரியாதைய தரவேண்டாமா?’

‘தாராளமா தருவோம். சட்டுன்னு ஒண்ணு கொடுத்தீங்கன்னா போர்ட ஏத்திடுவேன்.’

‘உங்களுக்கு புரியமாட்டேங்குது. வேணும்னா முதல்லேருந்து விளையாடுவோம். உங்க பிராண்டோட பொசிஷனிங்க முதல்ல நிர்ணயிக்கணும். அதுக்கேத்தா மாதிரி பெயர் வைக்கணும். அந்த பெயர் ரிஜிஸ்டர் பண்ண முடியாமான்னு பாக்கணும். அதுக்கு லோகோ டிசைன் செய்யணும். இவ்வளவு வேலை இருக்கு.’

‘லோகோ பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. எங்கிட்ட ஏற்கனவே ஒரு சூப்பர் டிசைன் இருக்கு. அதுல நீங்க கொடுக்கற பெயர அப்படியே ஃபிட் பண்ணிடுவேன்.’

‘நாசமா போச்சு. ஏங்க, முதல்ல துணிமணி வாங்கிட்டு அதுக்கேத்தா மாதிரி மாப்பிள்ளை தேடுவீங்களா?’

‘செய்யக்கூடாதுங்களா?’

‘கிழிஞ்சுது போங்க. பெயருக்கேத்தா மாதிரி தான் லோகோ இருக்கணும்’.

‘இப்ப பேக்கரிய திறக்கலாங்கறீகளா, வேண்டாங்கறீங்களா?’

‘திறக்கறதும் திறக்காததும் உங்க இஷ்டம். அப்படி திறந்தா அத சரியா செய்ய என்ன செய்யணும்னு தான் நான் சொல்றேன்’.

`ஒரே குழப்பமா இருக்குங்க. டைம் வேற ஆகுது.’

‘உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?’

‘ஒரு பொண்ணுங்க. பத்து வயசாகுது. பேரு ஸ்ம்ருதி. நல்லாருக்குங்களா?’

‘ரொம்ப அழகா இருக்கு. நீங்களே வச்சீங்களா?’

`நானும் என் பொண்டாட்டியும் தேடி தேடி யோசிச்சு முடிவு பண்ண பேருங்க.’

‘ஆனா, கடைக்கு மட்டும் அஞ்சு நிமிஷத்தில பேரு வேணூங்கறீங்க.’

‘ம்ம்ம். இப்ப தாங்க தெளிவு பொறந்திருக்கு. ரொம்ப தேங்க்ஸ்.’

‘பிராண்ட் பெயர் எப்படி வெக்கணும்னு புரிஞ்சுதுங்களா?’

‘தெளிவா புரிஞ்சுது. கைல வெண்ணெய வச்சுகிட்டு நெய்யுக்கு அலைஞ்சுட்டு இருந்தேன் இத்தனை நாளா.’

‘இப்பத்தான் பேக்கரிகாரர் மாதிரி பேசறீங்க.’

‘என் பேக்கரிக்கு பெயர் கிடைச்சிடுச்சி. `ஸ்ம்ருதி பேக்கரி’. சூப்பரா இருக்குங்களா?’

‘ஹலோ, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி சார். ஹலோ. லைன்ல இருக்கீங்களா? ஹலோ. வச்சுட்டாரு போலிருக்கு’.

satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்