பிப்ரவரி 29-க்கு பின்னரும் பேடிஎம் செயல்படும்: நிறுவனர்  விஜய் சேகர் சர்மா உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து பயனர்களின் கவலையைத் தணிக்கும் விதமாக, பிப்.29-க்கு பின்னரும் பேடிஎம் செயல்படும் என்று அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து ஒரு நாள் கழித்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர், "அனைத்து பேடிஎம் பயனர்களுக்கும், உங்கள் அபிமான பணம் செலுத்தும் ஆப் வேலை செய்கிறது. பிப்.29-க்கு பின்னரும் தொடர்ந்து வேலை செய்யும். உங்களுடைய இடைவிடாத ஆதரவுக்காக ஒவ்வொரு பேடிஎம் குழுவினருடனும் உங்களை நான் வணங்குகிறேன். ஒவ்வொரு சிக்கலுக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. முழுமையான இணக்கத்துடன் தேசத்துக்காக சேவை புரிய நாங்கள் கடமைபட்டுள்ளோம்.

பணம் செலுத்துவதில் புதுமை மற்றும் நிதி சேவைகளில் இந்தியா தொடர்ந்து உலகளாவிய பாராட்டுக்களைப் பெறும். அதில் ‘பேடிஎம்கரோ’ மிகப் பெரிய வெற்றியாளராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் அதன் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி ஜன.31(புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவித்திருந்தது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கையை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எதிர்கொண்டுள்ளது. என்றாலும் என்ன காரணத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.

முன்னதாக, விஜய் சேகர் சர்மா, “கட்டுப்பாட்டாளர்களின் பார்வையில் நாங்கள் சிறப்பாகவும் அதிக வலிமையுடனும், திறன் வாய்ந்தவர்களாகவும் வெளியேறி வருவதற்கு இது ஒரு வாய்ப்பு. இந்தச் சூழ்நிலையில் இருந்து நாங்கள் கட்டாயம் மீண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

பேடிஎம் பங்குகள் சரிவு: இதனிடையே பங்குச்சந்தையில் பேடிஎம்-ன் பங்குகள் மீண்டும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன. இன்று (வெள்ளிக்கிழமை) பேடிஎம்-ன் பங்கு விலை ரூ.487.05 ஆக திறந்தது. முன்னதாக நேற்று அவை ரூ.608.80 ஆக நிறைவடைந்திருந்தது. இதன் மூலம் இரண்டாவது நாளாக பேடிஎம் பங்குகள் 20 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தன. முன்னதாக ரிசர்வ் வங்கியின் உத்தரவினைத் தொடர்ந்து வியாழக்கிழமை பேடிஎம் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE