வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1937.00-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கின்றன.

அந்தவகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது.எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைப் பட்டியல் விவரம் வருமாறு:

நகரங்கள் விலை டெல்லி ரூ.1,769.50 கொல்கத்தா ரூ.1887.00 மும்பை ரூ.1723.50 சென்னை ரூ.1937.00

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE