சென்னையில் 450 நிறுவனங்கள் பங்கேற்கும் சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 22 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 450 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 37-வது சர்வதேச தோல் பொருட்கள் மற்றும் காலணி கண்காட்சியை சென்னையில் 3 நாட்கள் நடத்துகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ராஜேந்திர குமார் ஜலான் கூறியதாவது: இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி சென்னை வர்த்தகமையத்தில் பிப்.1-ம் தேதி (இன்று)முதல் பிப்.3-ம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் பிரேசில், இத்தாலி, ஜெர்மன்,பிரான்ஸ் உள்ளிட்ட 22 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 450-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சியோடு சேர்த்து,தோல் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் சார்பில் தோல் பொருட்கள் மற்றும்காலணி வடிவமைப்பாளர் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில், வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த 38 வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டு, தங்களது வடிவமைப்பு முன்மாதிரிகள் மற்றும் புதுமைகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

மத்திய அரசின் 2024-25 நிதிநிலை அறிக்கையில், தோல்களுக்கான 10 சதவீத இறக்குமதி வரியைநீக்குதல், அனைத்து மதிப்பு கூட்டிய தோல்களை ஏற்றுமதி வரியில்லாமல் அனுமதித்தல், இறக்குமதி வரி இல்லா ஐஜிசிஆர் திட்டத்தில் மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தோல் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வம் கூறும்போது, ‘இக்கண்காட்சியில் குறைந்தது 15 ஆயிரம் தொழில் முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.தோல் பொருட்கள் வடிவமைப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியஇயந்திரங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் காட்சிப்படுத்தவுள்ளன.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டுதோல் மற்றும் காலணிகளுக்கான கொள்கையை கொண்டு வந்த பிறகு, தோல் சாரா காலணி உற்பத்தியில் உலகின் மாபெரும் 5 நிறுவனங்கள் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் 2 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE