சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு, ஸ்பெயின் நாட்டின் ஆக்சியானா, ரோக்கா ஆகிய முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய முதலீடு, விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 27-ம் தேதி இரவு ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு 29-ம் தேதி நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில்துறை குழுமங்கள், முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை ஸ்பெயினில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் பலரும் சந்தித்து பேசினர். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அவர்களிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேட்டியோ, நிறுவனத்தின் நீர் பிரிவு தலைமை செயல் அதிகாரி மானுவல் மான்ஜோன் வில்டா ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர்.
அப்போது. காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு. நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டு வருவது குறித்தும் முதல்வர் விளக்கினார்.
எரிசக்தி கொள்கை: "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனி கொள்கையை வகுத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, இத்துறைகளில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் ஆக்சியானா நிறுவனத்தின் முதலீட்டுக்கு உகந்த இடமாக தமிழகம் இருக்கும்" என்றும் முதல்வர் எடுத்துரைத்தார்.
இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கினார். இதையடுத்து, தமிழகத்தில் இத்துறைகளில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இதன்பிறகு, வீட்டு கட்டுமான பொருட்கள், பீங்கான் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலஸ்க்வஸ், அதன் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
தமிழகத்தில் பெருந்துறை, ராணிப்பேட்டையில் தற்போது ரோக்கா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் விற்பனையை மேலும் உயர்த்தவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் அலகுகளை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். முதலீடு, ஏற்றுமதி செய்வதற்கு தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழல் குறித்து அமைச்சர் விளக்கினார்.
ரோக்கா ரூ.400 கோடி முதலீடு: இதையடுத்து, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் புதிய குழாய்கள், இணைப்புகள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற் சாலையை நிறுவவும், ராணிப்பேட்டை, பெருந்துறையில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் 200 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இந்த சந்திப்புகளின்போது, தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உடன் இருந்தார். வரும் நாட்களில், தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago