ஒ
ரு பயிற்சியாளர் என்பவர் நிறைய பதில்களைச் சொல்ல வேண்டியிருக்கும், நிறைய ஆலோசனைகளை வழங்க வேண்டியிருக்கும், நிறையவே தீர்வுகளைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால், நிறைய கேள்விகளைக் கேட்பதன் மூலமாக சிறந்த தலைவராகவும் பயிற்சியாளராகவும் ஆகமுடியும் என்ற வித்தியாசமான கோணத்தை முன்வைக்கிறது “மைக்கேல் புங்கே ஸ்டானியர்” என்ற நூலாசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள “தி கோச்சிங் ஹேபிட்” என்னும் இந்தப் புத்தகம். கேள்விகள் கேட்பதே பயிற்சியளித்தலுக்கான மிகச்சிறந்த யுக்தி என்றும் சிக்கல்களின் அடிப்படையை அறிந்துகொள்ளவும், அதற்கான தீர்வுகளின் மேம்பாட்டிற்கும் உதவும் வகையிலான ஏழு கேள்விகளையும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
தொடக்கக் கேள்வி!
நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பதைப்போல, ஒரு பயிற்சி அல்லது உரையாடலின் தொடக்கத்தில் கேட்கப்படும் சரியான கேள்வியானது அந்த நிகழ்வினை ஆழமாகவும் விரைவாகவும் கொண்டுச்செல்லும் என்பதை முதலில் மனதில் பதியவிடுங்கள். எப்படி தொடங்கவேண்டும் என்பது தெரியாததே, பலருக்கு பயிற்சியளித்தலில் உள்ள முக்கிய பிரச்சினையாக உள்ளது என்கிறார் ஆசிரியர். “உங்களது மனதில் என்ன உள்ளது?” என்பதே தொடக்கக் கேள்வியாக ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வலிமையாகவும் எளிமையாகவும் ஒரு உரையாடலை ஆரம்பிப்பதற்கான வழியே இக்கேள்வி. இது நாம் பயிற்சியளிக்கும் நபரை செயல்பாட்டிற்கு உள்ளே வரவழைக்கும் அழைப்புமணி போன்றது. இதன்மூலமே அவரது பிரச்சினையைப்பற்றி நம்பிக்கையுடனும் திறந்த மனதுடனும் நம்மிடம் பேசவைக்க முடியும்.
முழுமைக்கான கேள்வி!
விஷயங்களை மென்றும் முழுங்கியும் அரைகுறையாக சொல்பவர்களிடமிருந்து, முழுமையான தகவல்களை பெறுவதற்கான வழிமுறையே “வேறு என்ன?” என்ற இக்கேள்வி. பயிற்சியளித்தலுக்கான கேள்விகளுள் மிக முக்கியமான கேள்வியாக இது பார்க்கப்படுகிறது. ஒருவரது பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களும் சரிவர பயிற்சியாளருக்கு கிடைக்கும்போது மட்டுமே, அதனை முழுமையாக உள்வாங்கி அவரால் மிகச்சிறந்த உதவிகளை வழங்கிட முடியும். பயிற்சியாளருக்கான முழுமையான புரிதலுக்கும், பயிற்சிக்கான சரியான திட்டங்களை அடையாளம் காண்பதற்கும் இது பெரிதும் உதவுகின்றது எனலாம். மேலும், “வேறு ஒன்றும் இல்லை” என அந்த நபர் கூறும்வரையில் குறிப்பிட்ட இடைவெளியில் குறைந்தது மூன்று முறையாவது இக்கேள்வியைக் கேட்கவேண்டும். இதன் மூலமே புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கவும் வெளிக்கொணரவும் முடியும் என்கிறார் ஆசிரியர்.
கவன கேள்வி!
பயிற்சி பெறக்கூடியவரின் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக கேட்டறிந்த பிறகு, அதன் மையக்கரு என்ன? எங்கிருந்து தொடங்குவது? என்பனவற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. முதல் பிரச்சினையை விட, முக்கியமான பிரச்சினைக்கான தீர்வே அவசியம் அல்லவா!. பல்வேறு சிக்கல்களுடன் உங்களை அணுகும் ஒருவரின், அதிமுக்கிய சிக்கலின் மீதான கூர்மையான கவனத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியே இது. ஆம் “எது உனக்கான முக்கிய அல்லது உண்மையான பிரச்சினை?” என்பது, தவறான அல்லது அவசரமில்லாத பிரச்சினையை அடையாளம் காண்பதிலிருந்து பயிற்சியாளரை தடுக்கக்கூடியது. பிரச்சினையை தீர்க்கும் செயல்பாட்டில் அதிகப்படியான ஆற்றலையும் நேரத்தையும் செலவிடுவதை எப்படி தடுப்பது என்பதற்கான தீர்வினைக் கொடுப்பதாகவும் இது உள்ளது.
அடித்தள கேள்வி!
ஒருவரின் தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையேயான வேறுபாட்டை சிக்கலின்றி அறிந்துகொள்வதற்கான ஒரு எளிமையான கேள்வியே “உனக்கு என்ன வேண்டும்?” என்ற இந்த அடித்தள கேள்வி. பிரச்சினைகளை எளிதில் சொல்லிவிடும் ஒருவர், அதற்கு இதுதான் தீர்வாக வேண்டும் என்றோ அல்லது இந்த வழிகளை இதன் தீர்விற்குப் பயன்படுத்தலாம் என்றோ தனது மேலாளரிடமோ அல்லது பயிற்சியாளரிடமோ எளிதில் சொல்லத் தயங்குவார். இந்த கேள்வியின் மூலமாக அவரின் மனதிலுள்ள சொல்லத் தயங்கிய விஷயங்களையும் வெளியில் கொண்டுவரலாம் என்கிறார் ஆசிரியர். மேலும், இதன்மூலம் தீர்விற்கான செயல்பாட்டு சூழ்நிலையிலும், திட்டமிடுதலிலும் பயிற்சி பெறுபவரையும் பங்குபெறவைத்து மனரீதியாக அவருக்கான வலுவினையும் அளிக்கமுடியும். இது பயிற்சி அல்லது தீர்வின் வெற்றியில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடியது.
உதவிக்கான கேள்வி!
உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் ஒருவருக்கு உங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் கேள்வியே இது. அதாவது, ``நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?” அல்லது “என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வியானது, நீங்கள் அவரது பிரச்சினையை நன்றாக உணர்ந்து புரிந்துகொண்டீர்கள் என்பதற்கும், அவருக்கு உதவுவதற்கான செயலில் இறங்கிவிட்டீர்கள் என்பதற்கும் அத்தாட்சியாகவே பார்க்கப்படும். இது ஒரு பயனுள்ள கேள்வி என்பதையும் தாண்டி, மதிப்புமிக்கதொரு கேள்வியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தீர்விற்கான சூழ்நிலை, காலநேரம் மற்றும் உங்களிடமுள்ள சிறந்ததை பெறுவதற்கான வாய்ப்பும் இதன்மூலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அதேபோல எந்த புள்ளியிலிருந்து தொடங்கலாம் என்பதற்கான தெளிவு பயிற்சியாளருக்கு இக்கேள்வியின் மூலமாக கிடைக்கப்பெறும்.
யுக்திக்கான கேள்வி!
இந்த, யுக்திக்கான கேள்வி என்பது நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்விகளாக உள்ளது. அதாவது “ஆம்” மற்றும் “இல்லை” என்பனவற்றை பயன்படுத்துவதாக உள்ளது இது. இல்லை என்று முடிவுசெய்துவிட்ட ஒரு செயலை, ஆம் என்று ஏற்றுக்கொள்ளும்போது கையாளவேண்டிய விஷயங்களைப்பற்றி தெளிவாக விவரித்துள்ளார் ஆசிரியர். அதை எவ்வாறு சொல்லவேண்டும் மற்றும் அதற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன போன்றவற்றையும் கூறியுள்ளார். இவை தவிர வெற்றிக்கான ஆவல், செயல்பாட்டிற்கான இடம் மற்றும் சூழல், வெற்றிக்காகப் பயன்படுத்தப்போகும் வாய்ப்புகள், அவசியமான திறன்களின் தேவை, திட்டமிடல் மற்றும் அமைப்புமுறை ஆகிய யுக்திகளும் ஒரு பயிற்சி அல்லது சிக்கலின் தீர்வில் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது என்றும் இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களே என்றும் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
நீ என்ன கற்றுக்கொண்டாய்?, எதை நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறாய்?, எதை முக்கிய விஷயமாகக் கருதுகிறாய்?, போன்ற கேள்விகள் இருந்தாலும்கூட, இவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, பயிற்சிக்கான ஒரு முழு செயல்பாட்டில் ``எது அதிக பயனுள்ளதாக இருந்தது?” என்ற கேள்வி கேட்கப்படும்போது, அது கடந்து வந்த அனைத்து விஷயங்களின் வாயிலாகவும் ஒரு சிறந்த கற்றலுக்கான வாய்ப்பாகவே அமையும் என்கிறார் ஆசிரியர். ஒருவர் எதை சரியாகக் கற்றுக்கொண்டார், எதில் அதிக ஈடுபாடு செலுத்தினார், எவற்றையெல்லாம் எளிதாகவும் ஆர்வமாகவும் அறிந்துக்கொண்டார் போன்ற மதிப்பீடுகளைப் பெறுவதற்கான மிகச்சிறந்த வழியே இக்கேள்வி. மேலும், ஒரு மேலாளர் அல்லது பயிற்சியாளர் என்பவர் ஒரு குறிப்பிட்ட செயலில் அவரது குழுவினருக்கு எவ்வளவு பயனுள்ளவராக இருந்தார் என்பதையும் நினைவூட்டுகிறது.
இந்த கேள்விகளும், வழிமுறைகளும் நீங்கள் பயிற்சியளிக்கும் நபர்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், சக பணியாளர்கள், முதலாளி, நண்பர்கள், வாழ்க்கைதுணை மற்றும் குழந்தைகள் என அனைவரிடமுமே பயன்படுத்தி பயன்பெறும் வகையில் அமைந்திருப்பது சிறப்பானது. தலைமைத்துவ பண்புகளையும், அதுசார்ந்த பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும் நிச்சயம் புரட்டிப்பார்க்க வேண்டிய புத்தகம் இது.
p.krishnakumar@jsb.ac.in
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago