120 – க்கு 1. கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் ஜாக் மா வாங்கிய மார்க். அவன் அப்பா அதிர்ச்சி அடையவில்லை. அவருக்குத் தெரியும், மகன் ஆங்கிலத்தில் புலி, ஆனால் கணக்கில் எலி. ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறையும், நடுநிலைப் பள்ளியில் மூன்று முறையும் தோற்றிருக்கிறான். 84 மார்க் வாங்கினால்தான் கல்லூரி சீட் கிடைக்கும்.ஆகவே, இந்த வருடம் அட்மிஷன் இல்லை. அடுத்த வருடம் மறுபடியும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
ஜாக் மாவுக்குச் சும்மா இருக்கப் பிடிக்காது. அதுவரை என்ன செய்யலாம்? அப்பா, மா லைஃபா தன் நண்பர்களிடம் பேசினார். ஒருவர் பத்திரிகை விநியோகஸ்தராக இருந்தார். அவரிடம் ஒரு வேலை காலி இருந்தது. ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளி ஊர்களிலிருந்து நாளிதழ்களும், பத்திரிகைகளும் வரும். பொழுது விடியும் முன் அவற்றைச் சேகரிக்கவேண்டும், மூன்று சக்கர சைக்கிளில் வைத்து ஹாங்ஸெள நகரின் எல்லாப் பத்திரிகை விற்பனையாளர்களின் கடைகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். அதிகாலை முதல் மதியம் வரை வேலை. நடுவில் கொஞ்சம் இடைவெளி. மறுபடியும் மாலையில் நான்கு மணி முதல் இரவு எட்டு வரை. சுமையான பத்திரிகைக் கட்டுக்களோடு சைக்கிளைப் பல கிலோமீட்டர்கள் மிதிக்கவேண்டும். பதினந்து வயதுச் சிறுவன் செய்கிற வேலையல்ல. குருவி தலையில் பனங்காயைத் தூக்கிவைக்க அப்பா தயங்கினார்.
அப்பாவும், நண்பரும் பேசுவதை ஜாக் மா கேட்டுவிட்டான். அவனுக்குச் சவால்கள் அல்வா. கஷ்டமானது என்று ஒரு வேலையை யாராவது சொன்னால், அதைச் செய்து முடிப்பதில் த்ரில். இன்னொரு காரணமும் இருந்தது. குடும்பத்துக்காக அம்மாவும், அப்பாவும் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்குச் சந்தோஷம் தரவேண்டும். பாழாய்ப்போன கணக்குப் பாடத்தால், படிப்பில் அது முடியவில்லை. உடல் உழைத்துச் சம்பாதித்தாவது ஓரளவு உதவலாமே? கனமான சுமையோடு ஊர் முழுக்க மூன்று சக்கர சைக்கிள் ஓட்ட வேண்டும். சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கமுடியும், இது சிரமம்தான். ஆனால், அவனிடம் உயிரையே வைத்திருக்கும் குடும்பத்துக்காக இதைச் செய்யவேண்டும். அத்தோடு, அவனைப் பொறுத்தவரை, மனதில் உறுதி இருந்தால் எதுவும் முடியும்.
வேலைக்குப் போனான். அவனிடம் ஒரு குணம். எதை எடுத்துக்கொண்டாலும் தன் எதிர்காலமே அதில் இருப்பதுபோல் முழு முயற்சி எடுப்பான். ரசித்து, அனுபவித்துச் செய்வான். ஒவ்வொரு பத்திரிகைக் கடைக்காரரிடமும் உற்சாகத்தோடு பேசினான். ஜோக் அடித்தான். எல்லோருக்கும் பிடித்த டெலிவரி பாய் ஆகிவிட்டான். அவனுக்கு இருந்த ஒரே ஒரு குறை, வெளிநாட்டுக்காரர்களுக்கு ஊர் சுற்றிக்காட்டும் கைடாகப் போகமுடியவில்லை. முன்புபோல் ஆங்கிலம் கற்க முடியவில்லை.
இரவில் களைத்துப் போய் வீடு திரும்புவான். அசதியால், தூக்கம் வராது. படுக்கையில் புரண்டுகொண்டேயிருப்பான். அப்பா தன் வேலையை முடித்துக்கொண்டு வரும்போது இரவு நெடுநேரமாகிவிடும், நேராக ஜாக் மாவிடம் போவார்.
``இன்று எப்படி இருந்தது?” என்று விசாரிப்பார்.
பத்திரிகைக் கட்டுகளைத் தூக்கியதால் கைகளில் வலி. சைக்கிள் மிதித்ததால் கால்களில் வலி. அவன் பதிலே சொல்லாமல் புன்முறுவல் செய்வான். மகன் சிரமத்தைப் பார்த்து அவர் நெஞ்சில் வலி. அவன் கை, கால்களைப் பாந்தமாகப் பிடித்துவிடுவார். ரத்த பந்தத்தைவிட, இந்தப் பரஸ்பர அக்கறைதானே உறவுச் சங்கிலியை வலுவாக்குகிறது? ஆக்கியது.
ஒரு நாள் அப்பா கேட்டார், ``நாள் முழுக்க இப்படி உழைக்கிறாய். இதே உழைப்பை நீ நுழைவுத் தேர்வில் ஏன் போடுவதில்லை?”
ஜாக் மா பதில் சொல்லவில்லை. அன்று முதல் இடைவேளை கிடைக்கும்போதும், இரவில் வீட்டுக்கு வந்தவுடனும் கணக்குப் புத்தகத்தை எடுப்பான். படிப்பு, படிப்பு. அவன் அண்ணனிடமும், தங்கையிடமும், அம்மா எச்சரித்தாள், “மா யுன் படிக்கிறான். அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்.”
இத்தனை ஆயத்தங்களோடு ஜாக் மா இரண்டாம் முறை நுழைவுத் தேர்வு எழுதினான். இந்தத் தடவை கணக்கில் மார்க் 120 – க்கு 19. மறுபடியும் அட்மிஷன் இல்லை. ஜாக் மா மனம் உடைந்துபோனான். தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது . தான் கல்லூரிக்குப் போகப் போவதேயில்லை என்று பயம். இதை ஒத்துக்கொள்ளாதவர் ஒருவரே ஒருவர்தான் – அவன் அப்பா.
சீனாவில் லூ யா (Lu Yao) என்னும் பிரபல எழுத்தாளர் இருந்தார். 1949 – 1992 காலகட்டத்தில் வாழ்ந்தவர். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏழைக் குடும்பம், ஆறு சகோதர சகோதரிகள். கல்லூரி நாட்களிலேயே இவர் முதல் கதை வெளியானது. அடுத்துப் பல நாவல்கள். இவர் படைப்புகளின் மையக் கருத்து, “நம் சந்தோஷம் பிறர் தருவதல்ல. நம் உழைப்பாலும், வியர்வையாலும் நாமே உருவாக்குவது.” இந்த வீரிய எழுத்துகள் வாசகர்களுக்கு உற்சாக டானிக்காக இருந்தன. 1982 – ஆம் ஆண்டில் லூ யா, வாழ்க்கை (Life) என்னும் குறுநாவல் எழுதினார். கிராமத்திலிருந்து வரும் கா ஜியாலின் (Gao Jialin) என்னும் இளைஞன் தடைகளை உடைத்து உச்சம் காணும் கதை. ஒரு விதத்தில். லூ யாவின் சுயசரிதை. சீனாவின் அந்த வருடச் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. 1984 – இல் Life என்னும் சினிமாவாக வந்தது. சூப்பர் ஹிட். ஆஸ்காருக்குச் சீன நாட்டின் சார்பிலும் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்பா வாழ்க்கை புத்தகம் வாங்கித் தந்தார். ஜாக் மாவைப் படிக்கச் சொன்னார். தானும் கா ஜியாலின் போல் தடைக்கற்களைப் படிக்கற்களாக்க முடியும் என்னும் உத்வேகம் ஜாக் மாவுக்கு வந்தது.
நாள் முழுக்கக் கடினமாக வேலை பார்த்துக்கொண்டு தேர்வுக்கும் தயார் செய்துகொள்ள அவனால் முடியவில்லை என்று அப்பா புரிந்துகொண்டார். பத்திரிகை வேலையை விடச் சொன்னார். அரைகுறை மனதோடு அவன் சம்மதித்தான். அப்பாவும், அம்மாவும் தங்கள் அடிப்படை வசதிகளையும் தியாகம் செய்தார்கள். இப்படிச் சேமித்த மிச்சப் பணத்தில் அப்பா கணிதத்துக்கு ஒரு ட்யூஷன் மாஸ்டரை ஏற்பாடு செய்தார். அவர் அற்புதமான ஆசிரியர். கேள்விகளுக்கு நடைமுறை உதாரணங்கள் காட்டினார். படிப்பையே விளையாட்டாக்கினார். ஜாக் மாவுக்குக் கணக்கின் மேலிருந்த பயம் போனது. விருப்பத்தோடு படிக்கத் தொடங்கினான். மனதில் ஆழமாகப் பதியத் தொடங்கியது.
மூன்றாம் முறை தேர்வு எழுதினான். அப்பா அவனோடு தேர்வு நடக்கும் இடத்துக்கு வந்தார். தேர்வு முடியும்வரை காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார். தன்னைவிட அதிக மன அழுத்தத்தில் அவர் இருப்பதை உணர்ந்தான். மார்க் வந்தது . 120 –க்கு 79. கல்லூரியில் இடம் கிடைக்க சாதாரணமாக 84 மார்க் வேண்டும். ஜாக் மாவுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம். ஏனோ, மதிப்பெண்ணை 79 – ஆகத் தளர்த்தினார்கள்.
ஜாக் மாவுக்கு எப்போதுமே ஆசை அதிகம், அவன் இடத்தில் இன்னொரு இளைஞன் இருந்திருந்தால், எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ, அங்கே போய்ச் சேருவான். நம் ஹீரோவின் கால்கள் படுகுழியில் இருந்தாலும், கண்கள் வானத்து நட்சத்திரங்களில். உலகத்தின் நம்பர் 1 பல்கலைக் கழகம் எது என்று விசாரித்தான். அமெரிக்காவின் ஹார்வர்ட் என்று சொன்னார்கள். அங்கே, பத்து வகைப் படிப்புகளுக்கு அப்ளை பண்ணினான், சீனாவின் பிரபல பீஜிங், ஷாங்காய் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தான். தட்டுத் தடுமாறி, மூன்றாம் முயற்சியில் நுழைவுத் தேர்வை முடித்தவனுக்கு ஹார்வர்ட், பீஜிங், ஷாங்காயா கிடைக்கும்? உள்ளூர் ஹாங்ஸெள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் (Hangzhou Teacher’s Training Institute) இடம் கிடைத்தது. தனக்குப் பிடித்தமான ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. படிக்க முடிவெடுத்தான்.
அப்பாவின் உந்துதல் இருந்திருக்காவிட்டால், தான் கல்லூரி படிகளையே மிதித்திருக்க மாட்டோம் என்னும் எண்ணம் ஜாக் மாவுக்கு எப்போதும் உண்டு. பின்னாட்களில் அவர் சொன்னார், ``அந்த நாட்கள் என் வாழ்க்கையில், 1001 இரவுகளில் வரும் திறந்திடு சீஸேம். (தேர்வில் தோல்விகள்) போன்ற மாபெரும் பிரச்சினைகள் வந்தபோதும், நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனென்றால், என் அப்பா பல வருடங்களாகத் தேடிக் கண்டுபிடித்த உண்மை – உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும், உழைப்பின் மூலமாக அந்தத் துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் திறமைகள்தாம் வெற்றியைத் தேடித் தரும்.”
கல்லூரி திறப்பதற்கு முன் அவன் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அவனை மாற்றிய நிகழ்ச்சி.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago