20 ஏக்கரை ஒப்படைக்காததால் இழுபறி - முதல்வர் கையில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சர்வதேச விமான நிலையமாக இல்லாமலே மதுரை விமான நிலையம் பயணிகள் வருகை யில் சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்து நான்காவது பெரிய விமான நிலையமாகத் திகழ்கிறது. மற்ற விமான நிலையங்களைப் போல் வெளிநாட்டு விமானங்கள், இயக்கப்பட்டால் சென்னைக்கு அடுத்து இரண்டாவது விமான நிலையமாக முன்னேறி விடும். 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பு இன்று வரை வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் முழுவதையும் தமிழக அரசு கையகப்படுத்தி, அதற்கான பணிகளைத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப் பேற்று 2 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் மதுரை விமான நிலையத்துக்கான நிலம் முழுமையாக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு 2009-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெறவில்லை. மதுரை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுபாதை 7,500 அடியில் இருந்து 12,500 அடியாக உயர்த்துவதுதான் அடிப்படை திட்டம். இதற்கு தமிழக அரசு 615.92 ஏக்கர் ஒதுக்க வேண்டும். ஆனால், இதில் தமிழக அரசு 20 ஏக்கர் நிலத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை. இந்த 20 ஏக்கர் நிலம்தான் விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு முன் பகுதியில் உள்ள நீர்நிலைகள் உள்ள இடம்.

இந்த நிலத்தை ஒப்படைத்தால்தான் பணிகளைத் தொடங்க முடியும். இந்த நிலம் நீர்நிலைப் புறக்கும்போக்கு என்பதால் தமிழக முதல்வர் தலைமையிலான குழுதான் கூடி ஒப்புதல் வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த 20 ஏக்கருக்குப் பதிலாக மற்றொரு 20 ஏக்கரில் புதிதாக நீர்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்த நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்க முடியும். இந்த முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் ஒரே நாளில் கூடி முடிவெடுக்க முடியும்.

ஆனால், அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லாததே மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் தாமதத்துக்குக் காரணம். முக்கியமான இப்பிரச்சினையை அதிகாரிகள், உள்ளூர் அமைச்சர்கள் கொண்டு சென்றார்களா? என்பது தெரியவில்லை. மதுரைக்கு எப்போதும் புதிய திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் திருச்சியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவ்வாறு பிரதமரிடம் கோரிக்கையை முன்வைத்த முதல்வர், மதுரை விமானநிலையத்தின் விரிவாக்கப்பணி தாமதத்துக்கான காரணம் தெரியவந்தால் அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பார். அதனால், உள்ளூர் அமைச்சர்கள் தாமதத்துக்கான காரணம் மத்திய அரசா அல்லது மாநில அரசா என்ற விவரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தென் மாவட்ட தொழில் முனைவோர், விமானப் பயணிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு முதலில் 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக இருக்க வேண்டும். ஆனால், மதுரை விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கப்படவில்லை. அதற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பற்றாக்குறை முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அதனாலே, 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு, ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி 24 மணி நேர விமான நிலையமாக இன்று வரை மதுரை செயல்படத் தொடங்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE