தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்த உப்பளங்களை சீரமைத்து, உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். சீரமைக்க பல மடங்கு கூடுதல் செலவாகும் என்றும் உப்பு உற்பத்தியும் மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் எனவும் உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

கடுமையான சேதம்: இந்நிலையில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களை உருக் குலைத்துள்ளது. உப்பளங்கள் அனைத்தும் மிக கடுமையாக சேதமடைந் துள்ளன. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 6 லட்சம் டன் உப்பு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் உப்பள உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள்: தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தூத்துக் குடி மாவட்டத்தில் உப்பளங்களை சீரமைத்து, அடுத்த சீசன் உப்பு உற்பத்திக்கு தயார் படுத்தும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் தொடங்கி யுள்ளனர். உப்பளங்களில் குவிந்துள்ள மணல் குவியல்களை அகற்றுதல், சமன்படுத்துதல், கரைகளை சீரமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சரி செய்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். சேதம் மிக அதிகம் என்பதால் சீரமைப்பு பணிகளுக்கு பல மடங்கு செலவாகும். உப்பு உற்பத்தியும் மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

பல மடங்கு செலவு: தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: வழக்கமாக ஆண்டு தோறும் உப்பளங்களை சீரமைக்க ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். தற்போது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பாதிப்பை பொறுத்து செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உப்பளங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்களும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. அவற்றையும் சரி செய்ய வேண்டியுள்ளது. புதிதாக உப்பளம் அமைப்பது போல அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகளும் புதிதாக அமைக்க வேண்டியுள்ளது.

உற்பத்தி தாமதமாகும்: மழை நீர் அதிகமாக தேங்கிய தால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரில் உப்பின் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே, தரமான உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வருவதற்கு ஓரிரு மாதங்கள் வரை ஆகலாம். உப்பளங்களில் சீரமைப்பு பணிகளை முடித்து முழுமையான உப்பு உற்பத்தி மே மாதம் தான் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த ஆண்டு 50 சதவீத அளவுக்கு தான் உப்பு உற்பத்தி இருக்கும்.

உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியை தொடங்க ரூ.3 லட்சம் வரை கடன் தருவதாக மாவட்ட தொழில் மையம் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த தொகை போதுமானதாக இருக்காது. எனவே, ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். உப்பளங்களில் தற்போது சுமார் 4 லட்சம் டன் அளவுக்கு தான் உப்பு கையிருப்பில் உள்ளது. வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே இது போது மானதாக இருக்கும். அதற்குள் ஆங்காங்கே சிறிய அளவிலாவது உப்பு உற்பத்தி தொடங்கினால் நிலைமையை சமாளிக்கலாம். இல்லையெனில் வெளி மாநிலத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை வரும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE