ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

By செய்திப்பிரிவு

மும்பை: தெற்காசிய நாடுகளின் மற்றொரு சாதனையாக இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் வளர்ச்சி மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் அதனை முதலீட்டாளர்களின் விருப்பமானதாக மாற்றியுள்ளது.

ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கூட்டு மதிப்பு திங்கள்கிழமை நாளின் முடிவில் 4.33 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. ஹாங்காங் சந்தைகளின் கூட்டு மதிப்பு 4.29 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். இதன் மூலம் இந்தியா உலக அளவில் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளின் மூலதனம் கடந்த டிச.5-ம் தேதி முதல் முறையாக 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது. இதில் பாதியளவு கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டவை.

வளர்ந்து வரும் சில்லரை முதலீட்டாளர்களுக்கான தளம் மற்றும் கார்ப்பரேட் வருமானம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சர்வதேச முதலீட்டாளர்களின் உலகளாவிய சந்தையாக மாறியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி ஹாங்காங்கின் வரலாற்று சரிவுடன் ஒத்திசைந்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளதே பங்குச்சந்தைகளின் வளர்ச்சி போக்குக்கு முக்கிய காரணமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE