தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.284 கோடி நிகர லாபம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டின் 3-ம் காலாண்டில் ரூ.284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023- 2024-ம்நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன், நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில், 547 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2023- 2024-ம்நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இவ்வங்கி தனது மொத்த வணிகத்தில் 8.87 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.85,185 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ.46,799 கோடி மற்றும் கடன் தொகை ரூ.38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

அதிகபட்ச லாபம்: வங்கியின் நிகர மதிப்பு ரூ.6,741 கோடியில் இருந்து ரூ.7,668 கோடியாகவும், நிகர லாபம் ரூ.280 கோடியில் இருந்து, ரூ.284 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இது அதிகபட்ச காலாண்டு நிகர லாபம் ஆகும். வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,173 கோடியில் இருந்து ரூ.1,387 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் 1.70 சதவீதத்தில் இருந்து 1.69 சதவீதமாக குறைந்துள்ளது. பங்குகளின் முக மதிப்பு ரூ.426-ல் இருந்து, ரூ.484 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு வழங்கிய கடன் ரூ.25,636 கோடியில் இருந்துரூ.28,725 கோடியாக அதிகரித்துள்ளது. இது 12.05 சதவீத வளர்ச்சியாகும். முன்னுரிமை துறைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 40 சதவீதம் என்ற இலக்கை தாண்டி, 75 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவசாயத் துறைக்கு ரூ.13,338 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய துறைக்கு மொத்த கடனில் 18 சதவீதம் மட்டுமே வழங்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் 34.75 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.12,870 கோடியில் இருந்துரூ.13,064 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் 6 புதிய கிளைகளை திறந்துள்ளோம். வங்கிசேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு எடுத்த முடிவை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் செயல்படுத்தும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE