கர்நாடகாவில் வேலை நிறுத்தம்: தமிழக லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

ஓசூர்: கர்நாடகாவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நீதி சன்ஹிதா ( பிஎன்எஸ் ) சட்டத்தின் கீழ் விபத்து வழக்குகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லவிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை போலீஸார் தமிழக எல்லையான ஜூ ஜூ வாடியில் நேற்று காலை 6 மணி முதல் தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக, லாரியில் கொண்டு வந்த பொருட்களை உரிய நேரத்திற்குள் டெலிவரி செய்ய முடியாமல் லாரி ஓட்டுநர்கள் அவதியடைந்தனர். அதேபோல் மற்ற மாநில லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. பின்னர் கர்நாடக மாநிலத்தில் அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்ததால், மதியம் 3 மணிக்கு மேல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

ஆனாலும் சில லாரி ஓட்டுநர்கள் பெங்களூருக்கு செல்ல அச்சப்பட்டு தமிழக எல்லையில் லாரிகளை நிறுத்தி உள்ளனர். லாரியில் கொண்டு வந்த பொருட்களை உரிய நேரத்திற்குள் டெலிவரி செய்ய முடியாமல் லாரி ஓட்டுநர்கள் அவதியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE